மழலைகள்...
திகைத்துப் போகின்றன
குழந்தை தன்னை
தொடாதபோது
பொம்மையும்...
பொம்மை தன்னை
வெறுக்கும்போது
குழந்தையும்...
***
ஒன்றும் ஒன்றும்
ஒன்று என்று
குழந்தையொன்று
சொல்லும்போது
தன்னைத் தானே
நேசிக்கின்றது
கணக்கு!
***
சாமிக்குதான்
மொதல்ல
அப்புறம் நாம
சாப்பிடலாம்
என்று அம்மா
குழந்தையிடம்
சொன்னபிறகு
படையலை
வெறுத்தார்
பிள்ளையார்!!!
***
குழந்தை ஒன்றை
ஆசிர்வதித்த பிறகு
பாகனை ஏமாற்றி
காசைப் பெற்றதாய்
பாசாங்கு செய்தது
கோயில் யானை
பிஞ்சுக் கைகளில்
இன்னுமிருக்கிறது
அந்த ஒற்றைகாசு...
***
எங்கே அவர்கள்
என்று கேட்டபடி
வியாபாரியிடமிருந்து
பிரிந்து
குழந்தைகளைத் தேடி
ஓடுகின்றன
கடற்கரையில்
பலூன்கள்...