அனிச்சை ..
இரயில் தண்டவாளங்களுக்கு
அருகில் அந்த குடிசை....
உடன் பிறப்புக்களும்
பெற்றவளும்
அந்த வீட்டில் இல்லை...
ஏனெனில் அவர்கள்
இல்லவே இல்லை...
அவளும்
தந்தையும் தான்...
தந்தையும் காச நோயும்
நீண்டகால நண்பர்கள் ....
பள்ளிக்கு செல்வது
அவளுக்குப் பொழுதுபோக்கு ...
நான்காம் வகுப்பில்
அவள் இருக்கை .
மீதி நேரங்களில் ....
பின் வாசல் படியில்
அமர்ந்து ....
வரும் போகும்
இரயில்களுக்கு
கையசைப்பாள் ...
இரயில்களும்
முகம் தெரியாத
உருவங்களும்
இவளுக்கு தோழர்கள் ..
அந்த இரயில்களின்
ரசிகை இவள் .
ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு பெயர் வைப்பாள் ..
அவைகளில் ஒன்று
“பூனைக்குட்டி “- இரயில் .
பள்ளி முடிந்ததும் ...
பையை வீசிவிட்டு ...
தன் தந்தைக்கு
பணிவிடைகள் முடித்து ....
இரயில்களுடன் பேச
வந்து விடுவாள் .
படுக்கையில்
எத்தனை இரயில்களுக்கு
கையசைத்தோம் –என
எண்ணிப்பார்ப்பாள் ..
ஒரு நாள் .
மாலை.
பள்ளி முடிந்தது ..
உற்சாகமாய் வீடுதிரும்பினாள்.
காச நோய்
தந்தையின் உயிரை
குடித்திருந்தது .
எழுப்பிப் பார்த்தாள் ...
“அப்பா “- என்பதையே
அடிக்கடி ஆழமாய்
சொன்னாள் ...
அவர் எழவே இல்லை ...
அக்கம் பக்கத்தினர்
துக்கம் விசாரிக்க வந்தனர்.
தந்தையின் தலைமாட்டிற்கு
அருகில் அமர்ந்திருந்தாள் ...
தூரத்தில் ....
தூரத்தில் ....
இரயில் வண்டி
சத்தம் கேட்டது ...
படபடவென
பின் வாசல் விரைந்து ....
ஒரு கையில்
கண் துடைத்து ,
மறு கை –அசைத்துக் காட்டினாள்
புன்னகையுடன் ...
வந்து போன
இரயில்கள்
வழக்கம் போல
வந்து போயின ....
அவள் அழுவதற்கு
நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன ...
சிரிப்பதற்கு
சில நிமிடங்களே
மிஞ்சியிருந்தன ....!
-எபி