கிருஷ்ணவேணி
சுமார் ஏழு வருடங்கள்
லண்டனில் கழித்து
சென்னை வந்தடைந்தேன்.
திருமணம் இன்னும் ஆகவில்லை,
ஏங்கிக் கிடக்கிறேன் ஏதோவொரு
ஏவாளை மணமுடிக்க.
அன்று அதிகாலை எழுந்து,
முகசவரம் செய்து, தலைகுளித்து,
வாசனை சென்ட் அடித்து, தலைமுடி
படியவாரி, நல்ல துணி அணிந்து,
பல நாள் கணவை நிறைவேற்ற
கிளம்பிவிட்டேன்.
யாரிடமும் சொல்லவில்லை.
தெரிந்தவர்களிடம் இடம் கேட்டு
பைக்கில் கிளம்பிவிட்டேன்.
அந்த இடம் வந்து, எந்த சந்தென்று
ஒரு குழப்பம், கேட்பதற்கும் ஒரு
கூச்சம்.
ஒருவழியாக சரியான சந்து
கண்டு நுழைந்தேன்.
தேர்கூட்டம், பையிலோ
ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே.
ஒருவன் அருகில் வந்தான்,
வந்து மூவாயிரமென்றான்.
பேரம் பேசினேன், போலீஸ்
தொல்லை அதிகம், அதே ரேட்
என்றான். தட்டிகளிக்கவில்லை
கொடுத்துவிட்டேன் கேட்ட பணத்தை.
காதில் ஒருவன் வண்டியை வெளியே
நிறுத்தென்றான். நிறுத்திவிட்டு வழி தேடி
தொடர்ந்தேன்.
ஏதோஒரு படபடப்பு, வெயிலால் வேர்த
உடம்போடு உள்ளே சென்றேன்.
செய்வது சரியா?, தவறா?, அவசியமா?
எதுவுமே யோசிக்க முடியவில்லை.
நேரமாக, நேரமாக உடல் உஷ்ணம்
உலுக்கி எடுத்தது.
மேலும், கீழுமாக பார்த்த ஒருவன்
உள்ளே செல் என்றான்.
கழுத்து சங்கிலியை காலரில்
சொருகி உள்ளே நடந்தேன்.
கும்மிருட்டு, ஒன்றுமே தெரியவில்லை,
கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்.
எப்படியிருக்கும் இந்த அனுபவம்?
சிந்திக்க முடியவில்லை.
ஏசி காற்று சில்லென்று அடித்தும்,
வியர்வை நின்றபாடில்லை.
சிறிது நேரம் கழித்து, யாரோ
அமர்ந்தார் அருகில், உற்றுபார்த்தேன்,
ஒரு பெண்.
வயது கணிக்கமுடியவில்லை.
ஆனால் மல்லிகை மணம்
மூக்கை ஊடுருவியது.
சிலநொடிகளில் இன்னொரு பெண்
இடப்பக்கம்.
இருட்டு இன்னும் அதிகரித்தது.
ஜனநடமாடும் சத்தம் ஓயவில்லை.
பின்பு மயான அமைதி.
என் ரத்த ஓட்டம்
ராக்கெட் போல் உச்சம்
தொட்டது.
கால்களோ நிற்காமல் நடனமாடியது,
பரவசத்தில்.
சுகதாரமின்மை உடலை பதம்
பார்க்குமோ என்று அச்சம் வேறு.
அனுபவித்தே ஆகவேண்டுமென்று
ஆர்வம் வேறு. எப்போதும்போல்
ஆர்வமே ஜெயித்தது.
இபோது என் எதிரில் விளக்கணிந்த
சுருங்கிய சிகப்பு துணியை பார்க்க முடிகிறது.
அருகில் இருந்தவள் கை லேசாக பட்டது
எத்தேசையாக.
திரை மெல்ல மெல்ல விலகுகிறது.
நடுக்கமோ நாடு கடத்தியது.
மனதுக்குள் மணி அடித்தது.
பிறகு வெண் திரை கண்டேன்,
அதில் பூட்ஸ் கால் பார்த்து பூரித்தேன்.
பலாயிரம் பட்டாம்பூச்சிகள் மேல்நோக்கி
பறக்கக் கண்டேன்.
காதை கிழிக்கும் கரகோஷமோ?
கணிக்கவில்லை.
ஸ்லொவ் மோசனில் முழங்கால்
தரிசித்து, இடுப்பு பார்த்து,
கழுத்து கண்டு, தலைதூக்கி
முகதரிசனம் செய்ய
நினைக்கும்போது....
ஹலோ பாஸ்! கொஞ்சம் தணிஞ்சு
உட்காருங்கோன்னு ஒரு
கோரிக்கை.
கோபத்தை அடக்கிக்கொண்டு,
விரல் வைத்து, நாக்கு மடித்து,
விசில் அடித்து பார்த்தேன்
இயந்திரனை,
முதல் நாள், முதல் காட்சி,
ஏழு வருடம் கழித்து,
கிருஷ்ணவேணி தியேட்டரில்................