ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி




பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிபால குடிச்சுபுட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியூம் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியூம் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.

எழுதியவர் : ஜெ.சுந்தரபாண்டி (10-Dec-11, 1:11 am)
பார்வை : 6398

மேலே