ஆத்தா...
ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு
ராப்பகலா கண்முழிச்சு
திருகுக்கல்ல திருப்பித் திருப்பி
பருப்பரச்சா பாவிமக
பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந்
தூங்காம மகன் எனக்கு கத சொல்வா
விட்ட கொட்டாயி வத்திப் போயி அசந்திருப்பா
வீல்னு கத்தி வெடுக்னு முழிச்சிருவேன்
அள்ளி என்னை அணைச்சுக்கிட்டு
அப்புறமும் முழுச்சிருப்பா நான்தூங்க
உழைப்பெல்லாம் கொட்டிப்புட்டு
களைப்போடு கண்ணயர்வா-ஆனாலும்
வுடமாட்டேன் மணிக்கணக்கா கத கேப்பேன்
இருந்தாலும் அலுக்காம கத சொல்வா
ஒரு நாலு கத சொல்லாம சொகமில்லாம
படுத்திருந்தா... சோலப்பாட்டிக்கு சொல்லியனுப்பி
ஓடிவந்தா-கூனு விழுந்த சோலப்பாட்டி வெச்சுக்குடுத்த சுக்குத்தண்ணி வேண்டாமின்னு அடம்பிடிச்சா என்னாட்டம்...
நாலு நாளு இழுத்திட்டு இருந்தா..
என்னப் பெத்த மவராசி...
ஆனமுட்டும் கேட்டுப்பாத்தா என்னைமட்டும்
அழுவாதன்னு-நான்கேக்க மாட்டேனு தெரியும்
அடுத்த நாளு போயிச் சேந்தா....
சோலப்பாட்டி கால நீட்டி ஓலமிட்டே ஒடிஞ்சிருந்தா
கன்னமெல்லாம் வீங்கிப் போயி- கண்ணீரும்
வத்திப் போயி கதவோரம் சாஞ்சிருந்தேன்
ஆத்தாளப் பாத்திருந்தேன்...
திருகுகல்ல திருப்பி திருப்பி பாத்து
கைய சிக்க வச்சிகிட்டேன்
அழுக மட்டும் வரவேயில்ல
ஆத்தாளும் கேட்கவேயில்ல...