உசிலம்பட்டி பெண்குட்டி
அம்மா! உன்
கருவறைபையிலிருந்து
பெண் குழந்தை பேசுகின்றேன்!
நான் ஆண் இல்லை என்பதால்
அழிக்க சொன்னதால்
அழுகிறாயா அம்மா!
சொந்தங்கள் சிலரின்
சொல்லம்பு தாங்காமல்
துடிக்கிறாயே அம்மா!
மரணத்தை கொடு அம்மா
மெளனமாக ஏற்கிறேன்!
கூறிய ஆயுதத்தால்
என் குரல்வளை நெறியட்டும்!
கண்டம் இன்று எனக்கு என்று
பிண்டமாகி போகிறேன்!
வலி குறித்த முறையில் என்னை
தீர்த்துவிடு அம்மா!
மீறி நான் பிழைத்தால்
கொஞ்சம் தேய்த்து விடு அம்மா!
அம்மா! நேற்று
பப்பாளி குடி என்று
சொன்னவர்தான் பாட்டியா?
கமலம் டாக்டரிடம்
கலைக்க சொன்னவர்தான் தாத்தாவா?
கலைப்பதுதான் சரி என்று
கத்தியதே என் அத்தையா?
அரக்கர் தலைவன் போல்
அமர்ந்திருந்தது என் அப்பாவா?
உன் மேல் வயிற்றில் முகம் புதைத்து
அழுதது என் அண்ணாவா?
இறக்கப்போகும் எனக்காக
அதிகம் அழாதே அம்மா!
இங்கு மரமெல்லாம்
வளர்கையிலே
மகள் வளரமட்டேனா!
இறப்பதற்கு முன்
இறுதியாய் ஒரு வார்த்தை!
அம்மா!
அப்பா அடிக்காமல்
என் அண்ணாவை பார்த்துக்கொள்!