வாழ்கையின் இனிப்பு

பல் முளைக்காத
குழந்தையின் செல்ல கடி..

சாகும் வலி தருகிற பொழுதுகளை
சாதரணமாக்கும் தாய் மடி.

பட்டாம்பூச்சி பிடிக்க புறப்பட்டு
ஏற்பட்ட சிராய்ப்புகள்.

அடிபட்டு கிடந்த அணில் பிள்ளைக்கு
அப்பாவான அனுபவம்.

மளிகை பொருள் போக
மீதமிருக்கும் சில்லறைக்கு மிட்டாய்.

பாலைவன நெடு பயணத்தில்
பருக கிடைத்த இளநீர்.

மாலை நேர குளிரில்
கொஞ்சம் தேநீர்.

நாய்க்குட்டியின் நாக்கு வருடலில்
நனையும் சுகம்.

கனவில் கட்டிபிடிக்கும்
தெரியாத தேவதை முகம்.

பிரியமானவர்களிடம் இருந்து வரும்
பிறந்த நாள் பரிசு.

பிரசவம் முடிந்து பிள்ளையின்
முகம் காணும் தாயின் புளகம்.

பனித்துளிகள் படுத்திருக்கும் புல்வெளியில்
பாதம் வைத்திடும் பரவசம்.

அறியாமல் போன சாதனைக்கு
கிடைக்கும் சிறு சிறு பாராட்டு.

சாளரம் தாண்டி வரும்
சாரல் காற்று.

பெண்ணின் காதல் பெற
காத்திருப்பில் செத்து பிழைக்கும் ரணம் .

காதலை பெண் வெளிபடுத்தி
திகைக்க வைத்த முதல் கணம்.

நடுங்கி தயங்கி தைரியமிழந்து
முடியாமல் போன முதல் திருட்டு.

"என்னை மறந்துவிடாதே"
பெயர் ஞாபமில்லாத பள்ளி சிநேகிதன்.

"நீ நல்ல இருக்கணும் சாமி"
பிச்சைகாரியின் இதயபூரண வாழ்த்து.

கொள்ளு பேரன் முத்தம்
பெற்றுவிட்ட வயோதிகம்.

துடைப்பங்களால் துடைக்க முடியாத
துயர்படும் மனதின் மூலை முடுக்குகளில்
இப்படி வாழ்கையின் இனிப்புகள்
ஒழிந்துகிடக்கிறது.....

----தமிழ்தாசன்---

எழுதியவர் : ----தமிழ்தாசன்--- (5-Jan-12, 11:33 pm)
Tanglish : vaazhkayin inippu
பார்வை : 429

மேலே