எதிர்பார்ப்புகளில்லாத அன்பு

இக்கட்டுரைக்குள் செல்வதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டுரையின் தலைப்பை அன்றாட வாழ்க்கையில் காண முடியாது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள். காரணம், அவர்களுடைய பெயரை இப்பூவுலகில் நிலைத்து நிற்க வைக்கக் கூடிய கருவியாக அக்குழந்தை செயல்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. மட்டுமல்லாமல், தங்களால் சுயமாக உழைக்கமுடியாத காலகட்டம் வரும்போது தங்கள் குழந்தை தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறார்கள். தனது பெற்றோர்கள் தனக்குத் தேவையானதைத் தருவார்கன் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோரை நேசிக்கிறது.

நட்பு என்பது "எனக்குப் பிரச்சினை வரும்போது அவன் உதவுவான்" என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைகொண்டிருக்கிறது.

ஒரு பக்தன் கடவுள் மீது அன்பு செலுத்துகிறான். காரணம், அவ்வாறு அன்பு செலுத்தினால் தான் கடவுள் தனக்கு சொர்க்க வாழ்வை அளிப்பான் என்று அவன் நம்புகிறான்.

ஆசிரியர் நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய மாணவர்கள் மீது அன்பு செலுத்துகிறார். அதன்மூலம் தனது சக ஆசிரியர்கள் நடுவில் தனது மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கிறார். மாணவன் தன்னை ஆசிரியர் தண்டிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன் அவரை நேசிக்கிறான்.

இனி அன்பிலேயே விசித்திரமான அன்புக்கு நாம் வருவோம். எதிர்பாலினத்தவர் இடையிலான அன்பு. ஒரு ஆண்மகனைப் பொறுத்த வரை தான் நேசிக்கும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். (அழகின் வரையறை ஒவ்வொரு தனிமனிதரின் இரசனைக்கு ஏற்ப மாறுபடுகிறது) ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் அவள் தான் நேசிக்கும் ஆண்மகனிடமிருந்து உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை எதிர்பார்க்கிறாள். இன்னும் முக்கியமாக தங்களை நேசிப்பவர் மனத்தளவிலும், உடலளவிலும் தங்களுக்கு சொந்தமான வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கணவன் மனைவிக்கு இடையிலான பந்தம் என்பது சமூகத்தின் கட்டுப்பாட்டால் எழுந்த பந்தமாகவும், உடல்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பட்ட உறவாகவுமே இருக்கிறது. நிர்ப்பந்தத்தால் இவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்.

எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு.

எழுதியவர் : (6-Jan-12, 7:24 pm)
பார்வை : 3394

சிறந்த கட்டுரைகள்

மேலே