அம்மா உனக்கு நெனவிருக்கா ? பாகம் - 1

அப்போ எனக்கு 16 வயசிருக்கும்
பாலிடெக்னிக் முதலாமாண்டு
முதல் நாளுக்கும் முந்தைய இரவு

பிறந்த நாள்முதலாய் உன் முந்தானை பிடித்துக்கொண்டு
உன்னையே சுற்றிவந்த உன் ஒரே செல்ல மகன் (நான்)

முதன்முதலாய் படிப்பிற்காக உன்னை பிரியவேண்டி வந்தது
இத்தனைக்கும் ஒரேமாவட்டதின் கடைசிமூலை காரைக்குடி
அதிகபட்சம் 80 கிலோமீட்டர் தொலைவு கூட இருக்காது
அதுவே உனக்கும் எனக்கும் செவ்வாய் கிரகமாய் தோன்றியதே அம்மா உனக்கு நெனவிருக்கா ?

நீ அப்பாவிடம், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு நு
ஒத்த ஆம்பள புள்ள பெத்துருகேன்,
இங்கயே மதுர கோட்டையில இல்லாத காலேசா இங்க இருந்தா புள்ளபோயிட்டு போயிட்டு வருவான்ல
இந்தமனுசன் நான் சொல்லி எதகேட்டாறு இதமட்டும் கேட்க என்று குறைபட்டு கொண்டாயே நெனவிருக்கா ?

அதற்கவர் அடி லூசு கழுத நீதான் மழைக்கும்
பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவ
அவனாச்சும் என்னமாறி வெளியூர்போய் படிக்கட்டும் மடி

அவர்தான் அவர்காலத்தில் எங்கள் ஊரிலேயே வெளியூர் சென்று அதிகம் படித்தவர் என்ற பெருமைக்குரியவர்
(8 ஆம் வகுப்புவரை )

எனக்கு போர்வை போர்த்தி உறங்க பிடிக்காது உன் அருகில் படுத்து உன் சேலை முந்தானை போர்த்தி உன் இடுப்பில் ஒரு கால் இட்டு தூங்கினால் தான் தூக்கமே வரும்
இது சிறுவயது முதலே நான் பழகிய நல்ல கெட்டபழக்கம்

நான் ஊருக்கு செல்ல சூட்கேஸ் ஒன்று வாங்கிவந்தார் அப்பா
உன்னையும் என்னையும் பிரிக்க நினைக்கும் வில்லனாக மட்டுமே அப்போது எனக்கு தெரிந்தார் அவர்

என் துணிகளை எல்லாம் புலம்பியபடி துவைத்து போட்டு
அழுதபடி மடிச்சு வச்ச அம்மா நெனவிருக்கா ?

போர்வை ஒன்றை அப்பா எடுத்துவைக்க அவசரமாய் நான்தடுத்துவிட்டு
உன் அழுக்கு சேலை ஒன்றை அப்படியே சுருட்டிவச்சேன்
அம்மா நெனவிருக்கா ?

அடே கிறுக்கு பயமவனே அழுக்கு சேலடாஅது அதபோடு துவச்ச சேல நான் தாரேன் ன

துவச்சு வச்ச சேலையில உன்வாசம் இருக்காதும்மா
நீதான் என்கூட இருக்கமாட்ட உன் வாசமாச்சும் என்கூட இருக்கட்டும்
அப்பதாம்மா எனக்கு உன்கூட தூங்குற மாதிரி இருக்கும் நு நான் சொன்னதுமே
என்ன கட்டி அணச்சபடி கண்ணீருவிட்டுடியே அம்மா உனக்கு நெனவிருக்கா ?

தாத்தா இறந்தப்ப கூட கல்லுமாதிரி நின்னவரு
அப்பாவும் அழுது அன்று தானம்மா நான் பார்த்திருக்கேன் . . .

அம்மாவின் வா(பா)சம் தொடரும் . . .

எழுதியவர் : மோகனதாஸ் காந்தி (6-Jan-12, 9:43 pm)
பார்வை : 1530

மேலே