அப்ப மட்டும் இனிச்சதா.? –சிறுகதை-பொள்ளாச்சி அபி
“இந்தா சுப்ரமணி,இந்த எல்லைக்கல்லுல இருந்துதான் நம்ம சைட்டு. இந்தப்புதரையெல்லாம் வெட்டிக் கிளீன் பண்ணிடு.அப்புறமா அஸ்திவாரத்துக்கு மார்க் பண்ணி,வேலையை ஆரம்பிச்சிடலாம்..”இஞ்சினீயர் சொன்னதற்கு, “சரிங்க” எனத்தலையாட்டிவிட்டு,புதர்களை சுத்தமாக்கத் தொடங்கினான் சுப்ரமணி.
சுப்ரமணிக்கு இதுதான் வேலை என்றில்லை.கூலிவேலை எதுவானாலும் செய்துகொண்டிருந்தவன்,கடந்த சில மாதங்களாக இந்த இஞ்சினீயரிடம் சேர்ந்ததிலிருந்து,தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருந்தது.வெறும் தரையாக இருக்கும் இடத்தை சுத்தப்படுத்துவதிலிருந்து தொடங்கி,அங்கு கட்டிடமாக நிமிரும்வரை,மம்பட்டியாள் வேலை,சித்தாள் வேலை என எதுவாக இருந்தாலும்,மறுபேச்சு இல்லாமல்,சுப்ரமணி சொல்லும் ஒரே வார்த்தை “சரிங்க”.
இதனால் இஞ்சினீயருக்கு சுப்ரமணியை மிகவும் பிடித்துவிட்டது.எப்போதும் அவனுக்கு மட்டும் வேலை இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்.
மேலும்,சுப்ரமணியின் மனைவி லட்சுமியும்,கடுமையான உழைப்பாளி.எப்போதும் கணவனுக்கு ஒத்தாசையாக வேலைக்கு வந்துவிடுவதால்,கட்டிடத்தில் அவர்கள் இருவரும்தான் நம்பிக்கையான ஆட்கள்.கட்டுமானப் பொருட்கள் எல்லாம் அவர்களுடைய பொறுப்பிலேயேதான் இருக்கும்.இதுவரை திருட்டு பெரட்டு எதுவும் இல்லை.
சுப்ரமணி வெட்டிப்போட்ட புதர் குப்பைகளை அள்ளி,ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டிவிட்டு வந்தாள் லட்சுமி.
அஸ்திவாரம் தோண்டப்பட்டு,மட்டம் பார்த்து,அடுக்கப்பட்ட செங்கற்களால் சுவர்கள் மெல்லமெல்ல மேலெழுந்து கட்டிடத்திற்கு உயிர் கொடுத்தன.
மூன்று பெட்ரூம்களுடன் கூடிய அந்த வீடு,அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் உரிமையாளரான சுந்தரம்,மிகுந்த அக்கறையோடு,கன்னிமூலை, ஜலமூலை,வாயுமூலை,அக்னி மூலை எனப்பார்த்து,பார்த்து,வாஸ்துப்படி அமையவேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.தினமும் காலையில் பூஜை செய்யாமல் மற்ற எந்த வெளிவேலைக்கும் போகமாட்டார் என்பதால்,பூஜை அறையின் உள்ளேயும்,வெளியேயும்,எந்தக்குறையும் இருக்கக் கூடாது என்று அடிக்கடி இஞ்சினீயரிடம் சொல்லிவந்தார்.
வீட்டைப்பொறுத்தவரை,சுந்தரம் எந்தவிதமான அபிப்ராயத்தை சொன்னாலும், இஞ்சினீயர்,சுப்ரமணியை உடனே கூப்பிட்டுக் கொள்வார்.ஏனெனில் இஞ்சினீயரே,சிலபோது வேலை மும்முரத்தில் ஏதேனும் கவனிக்காமல் விட்டுவிட்டால்,அவ்வாறு நடக்க சுப்ரமணி விடமாட்டான்.வெகு அக்கறையாய் கவனித்துக் கொள்வதில் சமர்த்தன்.
வீடு ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது.இப்போதெல்லாம் சுந்தரமும் இங்குநிறைய நேரத்தை செலவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்.
இதனிடையில் தங்களுடன் வேலை செய்துவரும்,பாக்கியம் அடிக்கடி லீவு எடுத்துக்கொள்கிறாள்.அந்த நாட்களில் சுந்தரமும் வருவதில்லை.அவ்வப்போது சுந்தரமும்.பாக்கியமும் சிரித்தபடி கிசுகிசுப்பாக பேசிக் கொள்வதும்,இஞ்சினீயர் வந்துவிட்டால்,அவர் போகும் வரை,இருவரும் ஏதும் பேசிக் கொள்வதில்லை என்பதையும் அடிக்கடி லட்சுமி கவனித்துவந்தாள்,அதைப்பற்றி பாக்கியத்திடம் அவள் கேட்பதில்லை.திருமணம் முடித்து,இரு பெண் குழந்தைகளையும் அளித்துவிட்டு,டைபாய்டு காய்ச்சலில் இறந்துபோனான் கணவன்.பாவம் அவள்.!
மேலும் சிலநாட்கள் கழிந்தது.
அந்த வீட்டின் பதினொரு அறைகளிலும்,சுப்ரமணி,லட்சுமியின் கால்கள் படாத இடமில்லை.ஒவ்வொரு அடியிலும் அவர்களின் உழைப்பு இருந்தது. இவர்களைப் போலவே,மேஸ்திரி,மம்பட்டியாள்.சித்தாள் என ஆண்களும் பெண்களுமாக, பத்துக்கும் மேற்பட்டவர்கள்,தொடர்ந்து வேலை செய்ததால், இன்னதேதியில் முடித்துதருகிறோம் என்று,சுந்தரத்திடம்,இஞ்சினீயர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடிந்தது.
இங்கு வேலைசெய்த ஆண்களுக்கு வேட்டி,துண்டு,பெண்களுக்கு சேலை ஆகியவற்றை பணத்தோடு வைத்து,வீட்டுஉரிமையாளரான சுந்தரம் வழங்கவேண்டும் என்றும் இஞ்சினீயர் சொன்னதற்கு சுந்தரமும் சரியென்று சொல்லியிருக்கிறார்.
புதுமனைபுகு விழாவிற்கு குறிக்கப்பட்ட நாளும் வந்தது.வீடு அங்கங்கே தீட்டப்பட்ட அழகான வண்ணங்களில்,கம்பீரமாக நின்றிருந்தது.சுப்ரமணிக்கு அந்த வீட்டைப்பார்க்கப் பார்க்க பெருமையாக இருந்தது.பின்னே,அக்கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவனது உழைப்பு இருக்கிறதல்லவா..?.
சுந்தரத்தின் வீட்டுவழக்கப்படி எல்லாவிசேஷங்களும் முடிவுற்றதையடுத்து, ஏறக்குறைய வந்திருந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பிச் சென்றபின் வேலையாட்கள் அழைக்கப்பட்டனர்.
சுந்தரம்,அவரது மனைவி,உறவினர்கள் என இருந்த அந்தப்பெரிய ஹாலுக்குள் நுழைவதற்காக,சுப்ரமணி,லட்சுமி,பாக்கியம் என அனைவரும் சென்றபோது, இவர்களைக் கவனித்த சுந்தரம் திடுதிடுவென்று எழுந்து ஓடிவந்தார்.
“எல்லாரும் ஒரு நிமிஷம் இங்கியே நில்லுங்க..,”என்று கூறிவிட்டு,மீண்டும் உள்ளே ஓடினார்.அந்த இடைவெளியில் யாரோ ஒரு பெருசு,எல்லாம் என்ன ஜாதியோ..கொலமோ..? இதுகளையெல்லாம் எப்படி வீட்டுக்குள்ளே வுடறது..? என்று,இன்னொரு பெருசிடம் சொல்வதும் கேட்டது.
சிலவிநாடிகளில் ஒரு டேபிள் வெளியே தூக்கிவந்து போடப்பட்டு
அதன்மீது வேட்டி,சேலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.ஒவ்வெருவராக அழைத்து,உடைகளின் மீது நூறுரூபாய் வைத்துக் கொடுத்தார் சுந்தரம்.
லட்சுமியின் கையில் உடைகளைக் கொடுத்தபோது,அவளது கையை சிலவிநாடிகள் வேண்டுமென்றே சுந்தரம் தீண்டியது தெரிந்தது.நெருப்புப் பட்டாற்போல கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள் லட்சுமி.
இன்னும் சிலர் உடைகளை வாங்கவேண்டியிருந்த நிலையில்,பாக்கியம் அவ்விடத்திலிருந்து சற்று தள்ளி,தனியே நின்று கலங்கியபடி இருப்பதைக் கண்டாள் லட்சுமி.
“ஏய்.ஏண்டி இங்க நின்னு தனியா அழுதுட்டிருக்கிறே..?.”
பாக்கியம் பதில் சொல்லத் தயங்குவது தெரிந்தது.
“சும்மா சொல்லுடீன்னா..,”
“வேலைக்கு வந்த கொஞ்ச நாள்லேயே,இந்த வீட்டு ஓனர்,அடிக்கடி என்னை வெளியே கூட்டிட்டு போவாருக்கா..,அப்புறம் உடுமலை,பழனின்னு அடிக்கடி நிறையதடவை ரூம் போட்டு எல்லாம் தங்கியிருக்கோம்.ஆனா இப்ப நம்மளை வீட்டுக்குள்ளே விடறதுக்குகூட அவருக்கு மனசில்லாமே..,சாதியைச் சொல்லி,வெளியவே நிக்கவெச்சு, பிச்சைக்காரங்க மாதிரி துiணியைக் கொடுக்கிறாரு.அத நினைச்சேன்.அதுதான் அழுகை வந்திடுச்சு.!