வயோதிகத்தின் விளிம்பில்!..
வளர்ந்து வரும் வயதில்
வம்புசெய்துகொண்டே
இதென்ன இதென்ன
எத்தனை முறை
அதென்ன அதென்ன
எத்தனை முறை
அசராமல் கேட்ட
கேள்விக்கெல்லாம்
அலுத்துக்கொள்ளாமல்
அன்போடு அத்தனைக்கும்
பதிலளித்தேன்
”ஆனால்”
வயோதிகத்தின் வாசம்-என்
வயதைத்தொட்டு நிற்கையில்
இதென்ன இதென்ன
இரண்டாம் முறைக்கேட்டு
முடிக்கவில்லை
முகம் சிவக்க
முணுமுணுத்தாய்
எத்தனை முறை
சொன்னாலும்
புரியாத ஜென்மமென்று!
பளிச்சென்று புரிந்தது
எனக்கு
பிள்ளையின் பாசமின்று!...
16- 3-2010 அன்று
யூத்ஃபுல் விகடனில் வெளியான கவிதை.
இக்கவிதை என் முதல் கவிதை தொகுப்பான
“உணர்வுகளின் ஓசை”யிலும் உள்ளது..