......என் சிந்தனைகள் சில......

......என் சிந்தனைகள் சில......

கைதட்டல் வேண்டி
பொய்யின் அம்மணத்தை
சபைகளில் படமிடுகிறோம்.
இரத்தின ரவிக்கை உடுத்தி
உண்மைகளை ரகசிய பெட்டிகளில்
அடைத்து விடுகிறோம்.
சூனிய பொய்களுக்கு இருக்கும் சுதந்திரம்
சுந்தர உண்மைகளுக்கு இல்லை.
...............................................................................

வீட்டுக்குள் அடைந்துகிடந்தால்
இரண்டு இன்ச் இல்லாத
ஈக்கள் கூட உன்னை
இம்சை படுத்தும்.
................................................................................

தன் சிறிய குவளையில்
ஒரு துளி உயிர் மிச்சமிருக்கிறது
முறிந்த கால்களுடன் மீண்டும்
எழுத்து ஓட முயற்சிக்கிறது.
விரல் விபத்தில் நசுக்கப்பட்ட
எறும்பு ஒன்று...
காயம் பட்ட மனிதன்
கட்டிலை கல்லறையாக்கி கொள்கிறான்.
................................................................................

அடுத்த யுகத்தின்
அறிவியல் புரட்சி
அதன் முதிர்ச்சியில்
ஆராய்ச்சி கூடங்களிலிருந்து
அனுப்படுகிற ரசாயன காகிதங்களில்
அச்சடிக்கபடலாம்
மரங்களின் வரலாறு....
மாணவர்கள் படிக்க...
................................................................................

ஒரு குவளை நிறைய தேனை அள்ளி
குடிப்பதை விட
சொட்டு தேனில் தான்
சொர்க்கம் இருக்கிறது.
................................................................................

எரிந்த போன என் ஆதி தமிழ் வார்த்தைகளின்
சாம்பல் எடுத்து
திருநீர் தர முயல்கிறேன்.
மழுங்கிப்போன மாசலா வார்த்தைகளில்
சாம்பார் செய்து
தின்பண்டம் தர கேட்கிறார்கள்.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (10-Jan-12, 5:55 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 293

மேலே