1.கவிதையின் உத்திகளைக் கற்றுக் கொள்ளலாமா.?-பொள்ளாச்சி அபி
கட்டுரை.௧
ஒரு காலத்தில் தமிழ்மொழியில் படிப்பது என்பது,தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.பின்னர் உலகளாவிய அளவில்,பொருளீட்டுவதற்கான வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகியதையடுத்து,தாய்மொழியான,தமிழ்மொழியின் முக்கியத்துவம் பின் தள்ளப்பட்டுவிட்டது.
ஆனாலும்,மனிதன் தனது எண்ணங்களைப் வெளிப்படுத்துவதற்கு கவிதையும் ஒருவழி என்பதால்,தனது தொழில் சார்ந்த நிலையிலிருந்து,மாறுபட்டு கவிதைகளை எழுதுகிறான்.
தமிழ்மொழி மட்டுமே படித்தபோதுஈஅதற்குரிய இலக்கணத்துடன்,கவிதைகள் எழுத முடிந்தது.அது மரபுக்கவிதையாகவும் விளங்கியது.இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை.ஆனால் எண்ணங்களை கவிதையாக வெளிப்படுத்தவேண்டும் என்ற நிலையில் புதுக்கவிதை பிறக்கிறது.
மரபு என்பதில் ஒரு ஒழுங்கு அவசியம் தேவையாயிருந்தது.புதுக்கவிதையில் அந்த இலக்கண ஒழுங்குக்கு மாறாக,உத்திகள் என்பது பயன்படுத்தப்படுகிறது.
இது மரபிலும் இருந்தது.ஆனால் அதை ஒரு இலக்கணத்திற்குட்பட்டுத்தான் செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு புதுக்கவிதையில் இல்லை.
உத்திகள் என்றால் கவிதையை சொல்லும் அல்லது வெளிப்படுத்தும் பாணி.
சிலர் முன்வரிக்கும்,பின்வரிக்கும் எதுகையும்,மோனையும் இசைந்துவருவனவாக எழுதுவார்கள்.இவ்வாறு எழுதும்போது அதற்கான வார்த்தைகளைத்தேடிப் போட்டு,எடுத்துக் கொண்ட கருவிலிருந்து,விலகிச் செல்வதுமுண்டு.அது சில சமயம் புதிய,நல்லகவிதையாகவும்.சில சமயம் அதற்கு எதிராகவும் அமைந்து விடுகிறது.
இன்னும் சிலர்,எடுத்துக் கொண்ட பொருளை விளக்கும் வகையில் வார்த்தைகளின் அழகைப் பற்றி கவலைப்படாமல், சொல்லிச் செல்வார்கள்.
பொருளும் வார்த்தைகளும் இணைந்து,கவிதையாய் பரிணமித்து நிற்கையில்,வாசகனின் மனதில்,அது சிறந்த கவிதையாக நின்று விடுகிறது.
அதற்கு உதவியாகவே கவிதைகளில் உத்தி என்பது பயன்படுகிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைப் பேராசிரியராக இருந்த திரு.இரா.மோகன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் துணைகொண்டு,நாமும்
வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.மரபு மாற்ற உத்தி.
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக்காண்பது யோகியர் உள்ளம்.
என்று தொடங்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக்குறவஞ்சிப் பாடலை,கவிஞர் தமிழ்நாடன் இப்படி மாற்றுகிறார்.
ஓடக்காண்பது என்னவர் மானம்
ஒடுங்கக் காண்பது ஒருஜான் வயிறு
வாடக்காண்பது தேசியஉணர்வு
வருந்தக் காண்பது விடுதலைவீரர்
போடக் காண்பது ஜால்ராக் குல்லாய்
புலம்பக் காண்பது தேர்தலில்தோற்றார்.
தேடக்காண்பது உழைக்காத செல்வம்
திருடர் மலிந்த நவபாரதநாடே...!
குற்றாலக்குறவஞ்சிப்பாடலைப் பொறுத்தவரை,நாட்டைவிட்டு ஓடுவது பூம்புனல் வெள்ளமே,ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளமே என்பதுபோல ஒரு நாட்டின் சிறப்பைச் சொல்லிச் செல்வார்.ஆனால் கவிஞர் தமிழ்நாடனோ அதற்கு எதிராக தற்போதைய நாட்டின் நிலையை,அதே பாணியில்,சொல்வதைப் படிக்கும்போது,மிகநன்றாக அமைந்துவிடுகிறது.
இப்படி பழைய மரபினை மாற்றி,தற்காலத்திற்கேற்ற வகையில் பாடுவது ஒரு உத்தி.
2.திடீர் திருப்ப உத்தி
வாசகன் சற்றும் எதிர்பாராதவகையில்,ஒரு திருப்பத்தை தரும் சிறுகதையைப் போல,கவிதையிலும் தருவதே திடீர் திருப்ப உத்தி.
உதாரணமாக,தேர்தல் வாக்குறுதி தரும் அரசியல்வாதி ஒருவர் சொல்வதாக எழுதும் கவிஞர் வாலி எழுதிய வாக்காளப் பெருமக்களே என்ற கவிதையில்
என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால்
ஜாதிகளை ஒழிப்பேன்
வீதிகளில் உள்ள
ஜாதிப்பெயர்களை அழிப்பேன்
ஜாதி என்ற வார்த்தையுள்ள
பக்கத்தை அகராதியிலிருந்தே கிழிப்பேன்
இப்படியே கிழிப்பேன்,முடிப்பேன் என்று சொல்லிச் செல்லும் அரசியல்வாதி தனது உரையை முடிக்கும்போது, ஜாதியில்லாத சமுதாயத்தை அமைக்க எனக்கே ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லிவிட்டு,தாழ்ந்த குரலில் ரகசியமாக சொல்வதாக இப்படி முடித்திருப்பார்.
‘மறந்துவிடாதீர்கள் நான்
உங்கள் ஜாதிக்காரன்”..என்று.
-இன்னும் உள்ள நிறைய உத்திகளைக் குறித்து,தொடர்ந்து இதில் பேசுவோம்.
உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்த்து
அன்புடன் பொள்ளாச்சி அபி.