சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்
மடியில் சுமந்து பாலூட்டியவளை
"மம்மி" என்றழைக்கும்போதும்,
தமிழ்நாட்டுத் தகப்பனை
"டாடி" என்றழைக்கும்போதும்,
செவிபொத்தி அழுகின்றாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
நாகரீக நாகம் தீண்டி
நல்ல தமிழ் சாகும்போதும்,
நான்கு வரி தமிழில் பேச சிலர்
நாக்கு நுனி நோகும்போதும்,
சினம்கொண்டு சீறுகின்றாள்
செந்தீயாய் செந்தமிழ்த்தாய்!
தரமான தமிழ்ப் பெயர்கள்
தரணியிலே நூறிருக்க
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று
வடமொழியில் பெயர் வைத்தால்
சீறாமல் என்ன செய்வாள்
சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்!
தமிழ்த்தேரே இங்கு
தள்ளாடும்போது
வடமொழித்தேரின்
வடம்பிடித்திழுத்தால்
"சீ"யெனச் சீறுகிறாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
"கொலைவெறி"யாய் தமிழர் நாவில்
அலைமோதும் ஆங்கிலத்தால்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தொலைந்துபோன தமிழையெண்ணி
சிங்கமெனச் சீறுகிறாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
இளங்கோவும், பாரதியும்
இனிக்க இனிக்க இறைத்த தமிழ்
இங்கிலாந்தின் தாய்மொழியால்
இறங்குமுகம் காணும்போது
சிலிர்த்தெழுந்து சீறுகிறாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
ஊற்றுநீராம் உயர்தமிழில்
சேற்றுநீர் வந்து சேர்ந்ததுபோல்
காற்றுவாக்கில் கலந்துவிட்ட
வேற்றுமொழி வாரத்தைகளை
நாற்றைச் சூழ்ந்த களையெனவே
நாம் களைந்து எறிந்திடுவோம்!
சினம்கொண்ட தமிழ்தாயின்
மனம் மாறி மகிழ்ந்திடவே!
தினம் பேசும் நம்மொழியின்
தரம்கெடாது காத்திடவே
நல்லதமிழ் நாவிலேற்றி
நம்கடனைத் தீர்த்திடுவோம்!
-நிலவை.பார்த்திபன்