இவ்வாண்டு இனிதே நல்கட்டும்..

இவ்வாண்டு இனிதே நல்கட்டும்..

சென்றவை அனைத்தும் செல்லரித்து மனதைக்
கொன்றவை யாவும் செல்லட்டும் மறைந்து..

வசந்த வருகைக்காய் வாழ்ந்திருக்க இவ்வாண்டில்
கசந்தவை அனைத்தும் காற்றினிலே கரையட்டும்..

வந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோ மென்றில்லாது
தந்தோம் தருவோம் முடிவேதும் இல்லாதென...

சொற்களின் புயல்தனில் சிக்கினோம் செயலற்றே
புற்கள் பெறாதவைக்காய் புரிந்துவிட்டோம் போரொன்றை..

தக்க வைத்திடும் தகுதியொன் றில்லாமல்
விக்க லொன்றுக்காய் அமிலமதைக் குடித்தோம்..

நிரந்தரம் எதுவென்றே நினைத்திட வழியின்றி
நிதம் நிதம் சமர்செய்தோம் நிந்தனையில் வீழ்ந்திட்டோம்..

வரந்தரும் வார்த்தைகள் திசைஎட்டும் வலம்வந்தும்
சிரங்கொய்யும் சிற்றினமாய் சிக்கலில் தாழ்ந்திட்டோம்..

இனியொரு யுகமொன்றில் இனித்திட வாழ்வோமா
கனிபல நிறைந்திருந்தும் காய்தனைத்தான் சுவைப்போமா..?

காலத்தின் வயிற்றுக்குள் கணக்கில்லா நொடிப்புழுக்கள்
சோலையென சுகம் தருமோ செத்துவிழ ஏலாமோ..?

இந்த இக்கணம் மனத்தினில் நினைத்திருப்போம்
வந்த மறுகணம் அதையழிக்க செயலற்றோம்..

மயன்சொன்ன கதைநிஜமோ ஞாலமிது அழிந்திடுமோ
லயமிக்க நல்வாழ்க்கை காலந்தான் காட்டிடுமோ..?

ஈதேதும் அறியாமல் நிலையற்ற இவ்வுலகில்
வாதேதும் புரிந்து நிதம் வாழ்த்திட விழைவில்லை.

நான்செத்துப்போனாலும் என் நிழலும் கேடுசெய்யா
மானொத்து வாழ்ந்திட்டேன் மரணமும் சுகமெனக்கு..

வாழ்ந்திட ஏலுமெனில் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்
தாழ்ந்தே போய்மறைந்தாலும் தரமிழந்து செயல்புரியோம்..

வந்துதிக்கும் புத்தாண்டில் வளமெல்லாம் உனைச்சேர
சந்ததிகள் வாழ்ந்திடவே வாழ்த்திடுவேன் இப்பேதை..!

எழுதியவர் : கலைவேந்தன் (15-Jan-12, 7:58 pm)
பார்வை : 253

மேலே