மணமகள் மாங்கல்யம்

கொழுமை கொஞ்சும் கோமளமேனிக்
கோதை கொண்டாள் திருமணக்கோலம்
கயல் இரண்டு களிநடம் புரியும் சாயலிலே
காரிகை கவின்மிகு கண்கள்
நித்திலமாய் நெற்றியிலே
கச்சிதமாய் ஒரு குங்குமப் பொட்டு
வனப்பும் வாளிப்பும் வார்த்தெடுத்த ஆக்கை
சிவப்பும் செம்மஞ்சள் படடும் சீர் உடுத்து
புனைபல புனைந்து அணிபல அணிந்து
இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க
பட்டுவிரலாலே பல வண்ணச் சரமெடுத்து
பக்கம் வந்தடைந்தாள் ஏந்திழையாள்
பாதிவழித் துணை நாயகன் நாடி

நறவம் அனைய குரலாள்
நலங்கள் அனைத்தும் காக்கும்
ககனம் வாழ் காதலனோ! எனக்
கடைக்கண் பார்வை கணக்கெடுக்க
அம்மி மிதித்தோர் அருந்ததி பார்த்து
அண்டம் ஆய பொறை அவணியில் காக்க
சங்குக் கழுத்தில் தொங்கவோர்
தங்கச் சரட்டை அங்கமாய் அணிந்து – தன்
சொந்தச் சிறையில் பந்தலிட்டான்
சொந்தப் பெயரில் திருமதி இட்டான்

எழுதியவர் : kowsy (16-Jan-12, 2:54 am)
பார்வை : 266

மேலே