மனைவி மக்களுக்கு துரோகம் நினைக்கும் கணவான்களுக்கு மட்டும்..

தனக்கு வரும் மணவாட்டி
கற்ப்புக்கரசியாய் இருக்கவேண்டும்
என்றெண்ணி நிற்கும் கணவானே !

தான் மட்டும்
அங்ஙனம் வாழ
தவறி நிற்பது நியாம்தானோ ?

நீ நினைப்பதை
அவளும் நினைப்பது
நியாயமன்றி தவறாய்போய்விடுமோ ?

அந்நாளில் அவள்
எங்ஙனம் வாழ்ந்தாலும்
பின்னாளில் உன்னவளானபின்
உனக்கு உண்மையாய்வாழ்ந்தால் போதாதா !

முன்னாளில் வாழ்ந்த வாழ்வு
முறிந்துபோன இறகு ,
பின்னாளில் நீ வாழும் வாழ்வே
நல்ல ஆண்மைக்கு அழகு !

மனமொத்து வாழும் மணவாழ்வில்
நீ மட்டும்
குணம்கெட்டு போவது தகுமோ ?

கொண்டவளை கண்டபின் நீ
கண்டவளை நாடுதல்
உன் கற்பிற்கு அழகா ?

பெண்ணுக்குமட்டும்
ஒப்பானதல்ல 'கற்பு'
ஆணுக்கும் உண்டு "கற்பு"
"நம்பிக்கை" ஆணின் கற்பு ......

நின் மேல் நம்பிக்கைகொண்ட
நின் மனைவி ,மக்களுக்கு
நீ தரும் துரோகம்
விலைமகளை காட்டிலும் வெட்கக்கேடு ....

விலைமகளோ சூழ்நிலையின் பிடியால்
சோரம் போகின்றாள் ,
நீயோ சூழ்ச்சி செய்தன்றோ
தன்மானம் இழக்கின்றாய்..........

தாய்க்குப்பின்
தாரத்தில் தானே நீ
தாய்மையை காணமுடியும் ,
தாரத்தை பழித்தவன்
தாயைப் பழித்ததர்க்கே ஒப்பாவான்....

பேரன் பேத்தி பார்த்தபின்னும்
பெண்ணின்பம் நாடிசெல்பவன்
தரணியில் வாழவே
தகுதி இல்லாதவன் ..................

தன் பிள்ளைகளுக்கு
தான்தான் முன்னோடி என்பது மறந்து
பிள்ளைகளே மனம்வெந்து
பழிக்கும் நிலை வேதனை...

கண்டம்தாண்டி வாழ்ந்திருந்தும்
கண்ணியம் மாறாமல்
கண்டவளை சேராமல்
கட்டிய மனைவிக்காக
கற்போடு வாழ்ந்திருக்கும் பல
கணவான்கள் வாழும் பூமி ....

இங்கு கண்ணருகே மனைவி வாழ
கண்டவளை நாடிசென்று
கண்ணியத்தை இழந்து நீயும்
வாழும் வாழ்வும் ஒரு வாழ்வுதானோ ?

மதுபோதை உன்
மதியை மயக்கும்
மாது போதை உன்னை
அடிமட்டத்தில் தள்ளும் ,

மதுவுக்கு அடிமைபட்டவனும்
திருந்திவிடலாம்
மாதுவுக்கு அடிமையானவன்
திருந்துவது இயல்பா ?

கொலைகாரனையும்
கல்லறை ஏற்கும்
காமுகனைக் கண்டால்
கூசி தினம் ஏசும்.........

மோகத்தில் மனிதமனம்
கட்டவிழ்வது இயல்புதான்
அந்நேரத்தில் நீ விழித்தெழுந்தால்
கட்டவிழும் மனமும் - உன்
கட்டுப்பாட்டில் நின்றுவிடும்
தவறுகூட உன்னிடம்
தலைகவிழ்ந்து நின்றிடும் ...............

நம்பிக்கை துரோகத்துக்கு
மன்னிப்பு கோராதே
கொலைக்கு கூட இங்கு உண்டு
மன்னிப்பு
துரோகத்திற்கு இங்கில்லை மன்னிப்பு....

மன்னிப்பு கோரும் முன்
ஒன்றை மட்டும் நீ யோசி ,
இத்தவறை அவளும் செய்தால்
உன் வாய் சொல்லும் வார்த்தையோ
அவளொரு வேசி...

நியாயமென்றால் என்றும்
இருவருக்கும் பொதுவே
அதில் ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும்
இல்லை தனி பிரிவே !

ஒருமுறை மட்டும்
வாழக்கிடைக்கும்
வாழ்க்கை இது ,
வாழும்வரை உன்
வாழ்க்கைத்துணைக்கு
உண்மையாய் வாழ்ந்துவிடு .....

குணம் பிறழ்ந்து வாழும்
வாழ்வில் என்றும் இல்லை இனிப்பு ,
புரிந்து வாழும் வாழ்க்கை என்றும்
உறவுக்கு சிறப்பு....

சினத்தை கட்டுப்படுத்துபவனை விட
மனதை கட்டுப்படுத்துபவன்
மகான் ஆவான் !
நீ மகானாக வேண்டாம்
நல்ல மனிதனாய் வாழ்ந்துவிடு போதும்.....

ஆண் என்று ஆணவத்தில் மிதக்காதே
உன் போன்ற சிலரால்
பெண்ணுக்குவந்திடும்
ஆணினத்தின் மேல் வெறுப்பு !
அந்த வெறுப்புக்கு
உன்போன்ற சிலரே பொறுப்பு !

நான் ஆணாகி போனதால்
என்மேலே எனக்கும் மனகசப்பு !
நீ திருந்திவாழ்ந்தால் அதுவே
ஆணினத்திற்கு என்றும் சிறப்பு ....

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (27-Jan-12, 4:02 pm)
பார்வை : 1540

மேலே