ஆத்தா ஜொலிக்குறாளே

ஆடு மேச்ச புள்ள
அம்மணமாய் திரிஞ்ச புள்ள
கந்தல் துணிக்குள்ள காலத்த கழிச்ச புள்ள
அம்மன் விளையாடியதால
அடுக்களையில் சாஞ்சிபுட்டா
ஆத்தாதான் விளையாடுதான்னு
அம்மாவும் நினைச்சுப்புட்டா !
ஆத்தாவுக்கு பட்டெடுத்து சாத்துவதாக
நேமிதமும் செஞ்சிப்புட்டா !
அடுக்களையில் படுத்த புள்ள
அழகா கனவு கண்டா
அம்மன் கொடைக்கு
ஓட்ட துணிக்கு மாற்று துணி கிடைக்குமுன்னு
அம்மன் கொடையும் வந்தது
பட்டுப் புடவையில
ஆத்தா ஜொலிச்சுப்புட்டா !
ரெட்டியார்பட்டி சந்தையில
ஆட்ட வித்த பணத்துல
ஆத்தாளும் ஜொலிக்கிறாளே !
ஆடு மேச்ச புள்ள
அம்மணமாய் திரிஞ்ச புள்ள
கந்தல் துணிக்குள்ள காலத்த கழிச்ச புள்ள
உடுத்த துணியின்றி
அம்மணமாய் திரியுறாளே !
ஆத்தாளும் ஜொலிக்கிறாளே !
அம்மாவும் அழுதுக்கிட்டே சொல்லிப்புட்டா !
வைரஸ் விளையாட்ட
ஆத்தா விளையாட்டுன்னு
தப்பா நினைச்சுப்புட்டனே
அம்மணமாய் திரியுறாளே !
ஏ அழகு மகா !