ஒரு குடிமகனின் தீர்மானம்..!
செத்துச் செத்து வாழ்வதைநான் விட்டுவிட்டேன் -இனிச்
சீவனுடன் வாழ்வதற்குக் கற்றுவிட்டேன்!
புத்திகெட்ட செயல்களையும் விட்டு விட்டேன்!`-இனிப்
புதுவாழ்வு வாழ்வதெனத் துணிந்து விட்டேன்!
முத்து முத்துக் குழந்தைகளின் முகம்நினைத்தேன் -அவர்
முகம்தொலைத்த சிரிப்புகளுக்கு இனியுழைப்பேன்!
சக்திகெட்டு வாழ்வதுவும் வாழ்க்கையில்லை -பலர்
சக்திபெற இனியுழைப்பேன்! தாழ்வுமில்லை!
ஆசையெனும் மயக்கினிலே அமிழ்ந்துவிடேன்! -வெட்டி
அரசியலில் குரல்கொடுத்துத் தவழ்ந்துகெடேன்!
கூசியினி இலவயங்கள் மறுத்திடுவேன்! -நாட்டைக்
கூறுகட்டி விற்பவரை வெறுத்திடுவேன்!
மொழிசாதி மதம்,இனத்தை மறுத்திடுவேன்! -தேச
முன்னேற்றம் தடுப்பவரை அறுத்திடுவேன்!
விழிமூடிப் பலபொறுத்த நிலைவிடுத்தேன்! -பொது
வேலைகளில் ஊழலறத் தலையெடுத்தேன்!
மத்தளம்போல் அடிவாங்கி அழுதவொலி -இனி
மாறிவிடும்! புதுராகம் எழுந்ததடி!
வித்தகங்கள் செய்யயிதோ எழுந்துவிட்டேன்! -பூமி
வாழ்த்துமொலிப் பட்டாசாய் முழங்குதடி!
< 0 >