[55] குழந்தைக் கவிஞர் நினைவில்....!
[வெண்பா]
பாவாணர் வானத்துப் பிள்ளைநிலா கண்தூங்கிப்
போவானேன்? எம்மைப் பிரிவானேன்? -கூவியழும்
பிள்ளைக் குரல்களுக்குத் தாலாட்டாய்ப் பாடியவாய்
கொள்ளை யடித்ததார் கொல்!
பிஞ்சுக் கரங்களுடன் பேனா உறவாடக்
கொஞ்சும் மொழிகளிலே கொள்கைநலம்- விஞ்ச
உரைத்தார் இவரினும் உண்டோ? தமிழும்
நரைத்தே அறிந்திலன் நான்!
சொல்எளிய தண்டமிழில் சோர்வின்றித் தான்கண்ட
நல்லன,எல் லாமே நவின்றார்,அச் -செல்வமதை
வானோர் குழந்தைகட்கும் வரிக் கொடுத்திடவோ
தானேறிப் போனார்,அவ் வான்!
-௦-