[79] உழைப்பின் உயர்வு..! (குறட்பா வகை)
உண்டால் அம்ம! உலகம், உழைப்பவர்
கொண்டாடு மட்டும் குறித்து.
ஆளும் அரசுக்கும் ஆணி உழைப்பவர்!
வீழும் அவரின்றி வேந்து.
சூழும் நலன்களே சொல்லாவோ? வாழும்
உழைப்பே உயர்வுக்கு அழைப்பு!
அம்ம ! அரிவை முயக்கினும் நன்றுகாண்,
நம்மை உயர்த்தும் உழைப்பு!
பாடுற்றார் உண்டு பலரே, உழைப்பினால்
கேடுற்றார் உண்டோசொல் கேட்டு.!
அன்பும் அறனும் அமைந்தோர்க்கே நல்லுழைப்பின்
இன்பும் பயனும் இயல்பு!
உழைப்பெனும் ஊட்டினால் *ஓரைந்தும் காப்பான்
அழைப்பிலா வானோர் விருந்து!
[* ஓரைந்தும்- தன்குடும்பம்; தன்தொழிலகம்;
சமூகம்; நாடு; தான் -என்ற ஐந்து ]
உழைப்பே உயர்வுக்கு அழைப்பாம், உணர்ந்து
களிப்போம் களைப்பைக் களைந்து!
கோளில் உழைப்பைக் கொடுப்பவர் தாளினை
நாளும் வணங்குவோம் நாம்!
-௦-