உலகத்தின் ராஜா......

ஒரு சக்கரவர்த்தி இருந்தான். அவன் அனேக நாடுகளைப் போரிட்டு வென்றான். உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம். அவன் ஒரு சண்டையில் வென்ற பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது ஒரு வயதான துறவியைப் பார்த்தான். அவர் அழகான இயற்கைச்சூழலில் தனித்திருந்து பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவர் குரலிலே அன்பு பெருகியது. கண்களில் அறிவின் ஒளி தெரிந்தது.

சக்கரவர்த்தி அவரை நெருங்கிச் சென்று கேட்டான்: “”என்னை யார் என்று தெரிகிறதா?” துறவி சற்று நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, அதே கேள்வியையே சக்கரவர்த்தியிடம் திருப்பிக் கேட்டார்: “”என்னை யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா?”

சக்கரவர்த்தி, “”தெரியாது” என்று பதில் சொன்னான். பிறகு, துறவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: “”நான்தான் இந்த உலகத்தின் ராஜா!” சக்கரவர்த்தி பெரிதும் வியப்படைந்தான். அவன் சொன்னான்: “”என்ன சொல்கிறீர்கள். இந்த உலகத்தின் ராஜா நான்தான். நான் எவ்வளவோ நாடுகளை வென்றிருக்கிறேன்.”

துறவி சொன்னார்: “”அதிகார வெறிகொண்டு இப்படி அலைந்து திரிபவன் உலகத்தின் ராஜாவாக இருக்க முடியாது. இந்த உலகத்திலேயே நான்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே, நான்தான் இந்த உலகத்தின் ராஜா.”

சக்கரவர்த்தி கேட்டான்: “”மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்!”

துறவி உரக்கச் சிரித்தார்: “”அதுகூட உங்களுக்குத் தெரியாதா? அய்யோ பாவம்! உங்கள் மனதை ஆராய்ந்து பாருங்கள். அங்கே அமைதி இருக்கிறதா? அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. பேராசைக்காரர்களின் மனதில் எப்போதும் அமைதியற்ற தன்மைதான் இருக்கும். என்னைப் பாருங்கள்! எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போதும் அமைதி, சமாதானம், மகிழ்ச்சி!”
“”
நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?” என்று சக்கரவர்த்தி கேட்டான்.

துறவி சொன்னார்: “”பேராசையை வென்றவனே இந்த உலகின் உண்மையான ராஜா. தன் மனதைக் கட்டுப்படுத்தியவனிடத்தில்தான் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அவனிடம்தான் அமைதி இருக்கும். அப்படிப்பட்டவன் சக்கரவர்த்தியை விடப் பெரியவன்.”

துறவி சொன்னதை சக்கரவர்த்தி புரிந்துகொண்டான். தன்னை வென்றவனே இந்த உலகை வென்றவன் என்று அறிந்துகொண்ட பிறகு, அவன் போரிடுவதை விட்டொழித்தான். தன் குடிமக்களுக்குப் பணி செய்வதில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தான்.



செ.சத்யா செந்தில், தமிழ் முதலாம் ஆண்டு. மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (29-Feb-12, 3:41 pm)
பார்வை : 502

மேலே