[138 ] தேவைகளை முடித்துத் தேசத்தை நினைத்திடுவோம்!
கொள்ளையுமே அடித்தாலென்?
கோடிகளே இழந்தாலென்?
கொண்டுபோக இலவசங்கள்
கிடைக்கிறதா இல்லையா?
கண்டுகொள்ளா திருங்கைய்யா!
கைக்குவரும் பொருள் நினைங்க !
சுரண்டிவந்த வெள்ளையனை
விரட்டிவிட்டுச் சுதந்திரத்தை
வரட்டிதட்டி வாழ்வதற்கா
வாங்கிவந்தோம் ! -வேண்டுவதைச்
சுருட்டுதற்கு ஏற்றவழி
சொந்தமாகச் சிந்தியுங்கள்!
பொருத்தமான கட்சிகளில்
போய்ச்சேர்ந்து செயல்படுங்கள்!
வாய்வார்த்தை அறங்களெலாம்
வாழ்வதற்காய் இல்லைஅய்யா !
பாயதனைச் சுருட்டி விடும்!!
பைநிறைக்க வழிபாரும்!
கூவுவதால் ஓடிவிடக்
கும்பினியார் யாருமில்லை!
தேவனுக்கே பங்களித்துத்
திருடுபவர் நாங்களைய்யா!
ஆவலுள்ள பேர்களெல்லாம்
அணிதிரள்வீர் கட்சிக்குள் !
தேவைகளை முடித்துவிட்டுத்
தேசத்தை நினைத்திடுவோம்!
-௦-