வெளுக்கும் காவிகள்

காவியை அணிந்தோ ரெல்லாம்
கடவுளின் வடிவ மென்று
கோவிலிற் கொண்டு வைக்கும்
கோமாளித் தனத்தி னாலே
பாவிகள் கூட்டந் தன்னை
பாரினில் வளர்த்து விட்டுக்
கூவியே அழுத மக்காள்
குற்றத்தை உணர்வீ ராக!

விஞ்ஞானம் வளர்ந்த தென்று
வியக்கின்ற அதேநே ரத்தில்
அஞ்ஞானம் வளர்ந்த தெண்ணி
அழாமலும் இருத்தற் கில்லை
இஞ்ஞான்றும் திருந்தா விட்டால்
இடும்பைக்கு அளவே இல்லை
எஞ்ஞான்றும் உழல வேண்டும்
என்பதில் ஐய மில்லை!

பொய்யினைப் புரட்டை யெல்லாம்
புத்தியில் ஆரா யாமல்
ஐயமே சிறிது மின்றி
அடியுடன் ஏற்பீர்; ஆனால்
வையகத் தொடக்கந் தொட்டு
இற்றைநாள் மட்டு மிங்கே
மெய்யினை மட்டும் ஏனோ
உரசிய பின்னே ஏற்பீர்!


காசியைத் தொடுவோ ரெல்லாம்
கைலாயம் தொடுவ தில்லை
கோஷங்கள் இடுவோ ரெல்லாம்
கொள்கையின் செல்வ ரில்லை!
மோசத்தை அடைந்த பின்னும்
மதிவர வில்லை யென்றால்
நாசத்தைத் தடுப்ப வர்யார்?
நாயகா சபரி நாதா!

-ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (6-Mar-12, 9:37 pm)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 225

மேலே