மதிப்பிற்குரிய அமுதா அம்மு அவர்களின் 17 கவிதைகளின் ஆய்வு
குறிப்பு:இதில் எனக்கு யாருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்பதை முதலிலேயே அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமுதா அம்முவின் 13.02.2011 ல் எழுதிய 'கண்ணில் பட்டது (2) என்ற கவிதைக்கு, 23 வயதே ஆன நாகமணி என்ற 'Bad boy' தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளானது. கவிதையை விமர்சிப்பதை நாம் அனைவரும் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள பழக வேண்டும்.
நாம் எவ்வளவு பேர் மரபுக் கவிதை எழுதுகிறோம்? எவ்வளவு பேர் தமிழ் பாடத்தில் பட்டம் - புலவர், இளங்கலை, முதுகலை, முனைவர் - வாங்கியிருக்கிறோம்? மரபுக் கவிதையில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று பலவகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் இலக்கணமும் உண்டு.
நம்மில் பெரும்பாலோர் எழுதவேண்டும் என்ற விருப்பில் புதுக் கவிதை வடிவில் எழுதுகிறோம், எழுத்துப் பிழை, கருத்துப் பிழை பரிசீலனை இன்றி அனைவரது கவிதைகளும் வெளியிடப்படுகின்றன. இதிலும் ஒரு ஒழுங்கு முறையும், தோற்றத்தில் அழகும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? மனதில் தோன்றுவதைக் கட்டுரையாக எழுதி, மூன்று சொல், நான்கு சொல்லாக மடக்கிப் போட்டால் கவிதையாகி விடுமா என்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கவிதை எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். முடிந்த அளவு அவைகளை இரண்டு இரண்டு அடிகளாக, நான்கு நான்கு அடிகளாக, ஆறு அடி, எட்டு அடி என்று அழகுற அமைத்தால் என்ன? என்பதுதான் ஆதங்கம். வாசிப்பதற்கும் ஆர்வம் உண்டாகும். இதில் முடிந்தால் எதுகை, மோனையும், சொல் அலங்காரங்களும் அமைந்தால் நல்லது.
கவிதை எழுதியவுடன் பதிவு செய்ய வேண்டும் என்று யாரும் அவசரப்பட வேண்டியதில்லை. நிதானமாக வாசியுங்கள். எழுத்துப் பிழைகளைச் சரி பாருங்கள். இரண்டு நாட்கள் சேமித்து வைத்திருங்கள். தேவையானால் மாற்றம் செய்யுங்கள். முடிந்தவரை நீங்களே தட்டச்சு செய்யுங்கள். உதவியாளரிடமோ, மாணவர்களிடமோ கொடுத்தால் தவறுகளைத் திருத்த முடியாமல் போகலாம்.
அமுதா அம்மு அவர்கள் கவிதைகள், அதன் ஊடாக உள்ள கருத்துக்களின் மீது எனக்கு ஆர்வமும் அக்கறையும் உண்டு.
அவர்கள் நாகமணியை வாசிக்கச் சொன்ன குறிப்பிட்ட 17 கவிதைகள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை வாசித்தேன். விருப்பு, வெறுப்பின்றி ஆய்வு செய்தேன்.
'மலரின் துயரம்' கவிதை மிகவும் நன்றாக உள்ளது. 'மனிதகாட்சி சாலை, முத்தம், எந்தத் தலைப்பில் நான் எழுத' ஆகிய கவிதைகள் நன்றாக அமைந்து இருக்கின்றன.
பெண்ணே நீ ஏன் பிறந்தாய் (23 வரி), இவளும் கண்ணகியே (24 வரி), சுமங்கலி விதவை (56 வரி) ஆகியவை நீண்ட கவிதைகள். இவைகளை இன்னும் செம்மைப் படுத்தி இருக்கலாம்.
மேற்கூறிய ஏழு கவிதைகள் போக, பத்து கவிதைகளிலும் ஒவ்வொரு பத்தியும் வெவ்வேறு எண்ணிக்கையில் வரிகள் அமைந்துள்ளன. அழகுற அமையவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.
'கண்ணில் பட்டது (2) என்ற கவிதைபற்றி 'இது கண்டிப்பா கவிதை இல்ல.. 50 வரிகள் எழுதின அது கட்டுரை' என்று நாகமணி கூறிய கருத்தில் எந்த தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை.
தாய்வீடு சென்றது, பிஸ்சா வாங்கியது தவிர்த்து, கண்ணில் பட்ட குடிபோதையினால் ஒருவன் ஏற்படுத்திய அத்துமீறல் மற்றும் ஒழுக்கக் கேட்டை மட்டும் தெரிவித்தால் போதும் என்று நினைக்கிறேன்.