[159 ] உணர்த்திடு, தெய்வமாகு..!
நீரது மலைப்பி றந்தும்
....நிறைவளம் எடுத்துச் சென்றே,
ஊர்தோறும் சேர்க்கும், அந்த
....உவர்க்கடல் உள்ளும் பாயும்!
நீருடன் கலந்த பாலே
....நிறமதை நீருக்கு ஈந்து
சேரிடம் சிறக்கச் செய்யும்;
....செம்மலே! தூரம் ஏனோ?
'மோசே'போல் தேர்வு செய்து,
....மோசமாம் அடிமை வாழ்வைத்
தூசேபோல் உதற வைத்துத்
....தூரத்துக் கானான் நாட்டின்
வாசலில் நிறுத்தி விட்டால்,
....வள்ளல்,நீ ஆகப் போமோ?
ஆசையைக் காட்டித் தானே
....அழைத்து,நீ வந்தாய் என்னை?
தூரத்தே இருந்த என்னை,
....துயரத்தில் வாழ்ந்த 'மண்ணை'
ஈரத்தைக் காட்டிக் கையில்
....எடுத்தபின் தயக்கம் ஏனோ?
பாரத்தை உன்னுள் வைத்தே,
....பாதத்தில் கிடக்கும் என்னுள்
சாரத்தைக் கூட்டி உன்னைச்
....சார்ந்தவன் என்று காட்டு!
சேர்ந்தவர் மலங்கள் நீக்கிச்
....சேர்ப்பவர் தானே தேவன்?
'சேர்ந்த,உன் மலங்கள் போக்கிச்
....சிந்தனை திருத்தி, வந்து
நேர்ந்திடு! கொள்வேன்' என்று
....நீயெனைத் தவிர்க்கப் போமோ?
ஓர்ந்திடு,நீயே! உன்னை
....உணர்த்திடு! தெய்வம் ஆகு!
-௦-