இடப்பெயர்ச்சி

அரசாங்க ஆலை வருகிறதாம்....
ஆட்சியாளர் சொல்கின்றார்.....
இருப்பிடத்தை கொடுத்துவிட்டு.....

ஈகின்ற இடத்தினிலே....
உறைவிடம் அமைத்துக்கொள்....!
ஊராரும் பணிந்துவிட்டார்.....
எனக்குத்தான் உடன்பாடில்லை.....

ஏக்கத்துடன் என் வீட்டுச் செவ்வாழை.....
ஐந்து மாதமேயான பெருநெல்லி...
ஒரு பிடி சோறு கேட்டு - தினம்
ஓடி வரும் அணில்பிள்ளை....
அவ்விடத்தை விட்டுவர....

எனக்குத்தான் உடன்பாடில்லை.....

"இடத்திற்கு பணத்தோடு
சீமைக்கருகில் இடமாம் "
பத்திரிக்கை படித்த பார்வையாளன்....
பரவசத்தோடு சிலிர்க்கின்றான்....

ஆம்....!
சீமையில்தான் மாற்று இடம்...
நஷ்ட ஈடு பணத்தோடு...

என் வீட்டு கொய்யாப்பழம் கொரிக்க...
தினம் வரும் ' பச்சைக்கிளி..'
"எலேய் வெத்தலை வாங்கிட்டுவா..!"
எதிர் வீட்டு பார்வதி ' ஆச்சி '

"மக்கா எங்க தூரமா ?"
அடுத்த வீட்டு அய்யாதுரை ' மாமா '
"பை அங்கிள்"
தெருமுனை அஞ்சலி ' பாப்பா '

இவையாவும் இதுபோலவே இருக்குமா..?
என் புதுவீட்டில்...!

இடப்பெயர்ச்சி......
மற்றவர்க்கு அதுவும் ஒரு நிகழ்ச்சி..
இழக்கின்ற எங்களுக்கு...
மாறாத வடு...!

எழுதியவர் : மீரா ஆதிரை (17-Mar-12, 10:42 pm)
சேர்த்தது : athirai
பார்வை : 214

மேலே