மாமா..என்னைப்பாரு மாமா..! பொள்ளாச்சி அபி

மாமா..என்னைப்பாரு மாமா..!
உன் குழந்தைபோல எனக்கும்
ஓடிவிளையாட ஆசைதான்..
அப்பா வீட்டுக்கு வந்தவுடன்
ஆசையாய் அணைக்க ஆசைதான்..
அம்மாவின் மடிசாய்ந்து
அற்புதக் கனவுகாண ஆசைதான்
என்வயதொத்த பிள்ளைகளோடு
கைகோர்த்து விளையாட ஆசைதான்..
மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆசைதான்..

ஆனால் என் ஆசை மாமா..
அப்பாவை இழுத்துச் சென்ற
இராணுவம் அவரையெங்கே
சுட்டுப் பொசுக்குச்சோ..
அம்மாவை தூக்கிச்சென்ற
அரக்கக்கூட்டம் அவளை
எந்தத் தீயில் வீசுச்சோ..
தம்பியையும் தங்கையையும்
எந்த ஈ,எறும்பு அரிச்சுச்சோ
குண்டுமழையிலே நனைஞ்ச
எங்கவீடு எங்கே கரைஞ்சுச்சோ
மாமா..பதுங்கு குழியைக் காண்பிச்சு
இதுதான் உங்கவீடுன்னு சொன்னாங்க..
எனக்கு இங்கேயிருக்க முடியலே மாமா..
உங்க ஊருக்கு என்னை
அழைச்சுட்டுப்போ மாமா..!
உன்குழந்தை போல
என்னையும் நினைச்சுப்பாரு மாமா..!
மாமா..மாமா..என் பசிமயக்கத்திலே
கத்திக்கூப்பிட முடியலே மாமா..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (19-Mar-12, 6:04 pm)
பார்வை : 329

மேலே