[184 ] இளைப்பாறல் தந்த இறை..!

[ அருள்திரு முனைவர் தயானந்த பிரான்சிஸ் , ஜார்ஜ் ஹெர்பர்ட் அவர்களின் மூலக் கவிதையை மொழியாக்கம் செய்துள்ளார்; அதைக் கடந்த ஜனவரி 2008 -இல் படித்தபொழுது ஏற்பட்ட தாக்கமே இக்கவிதை]

மனிதனைப் படைத்த இறைவன்தன்
மனக்குடம் நிறைய ஆசிகளாம்!
தினமும் இறைவன் அவனுக்குத்
தேர்ந்து கொடுக்க நினைத்தாராம்!

அனைத்து நலனும் வளங்களுமே
அவன்கைக்கு அடங்க விரும்பினாராம்!
நினைத்து நினைத்துக் கேட்குமுனே
நிறையக் கொடுத்தார் இறைவனுமே!

'ஆற்றல்' முதலில், அதன்பின்னர்
'அழகும்', 'அறிவும்', 'மாண்பும்',எனத்
தேற்றர வாளர் 'இன்பமுடன்'
தேர்ந்து தேர்ந்து தினந்தந்தார்!

எஞ்சி நின்றது 'இளைப்பாறல்'
என்னும் மனத்து நிம்மதியே!
கொஞ்சம் தனக்குள் இறைவனுமே
கூர்மையாகச் சிந்தித்தார்!

'அறிவும்' 'வளமும்' 'நலன்களுமே'
'அமைதி' யோடும் பெற்றுவிடக்
குறைகள் இல்லா மனிதனுமே
கொஞ்சமும் என்னை நினையானே!

நிறைவு கூட்டும் நிம்மதியை
நினைத்து ,மனிதன் தன்னிடமே
வருதல் நன்றாம் என,எண்ணி
வைத்துக் கொண்டார் தாம்,அதனை!

'திறமை', 'அழகு', 'திரண்டநலம்'
தெரிந்து கொண்ட மனிதன்,பின்
'வெறுமை', 'துயரம்' மிகக்கொண்டு
வேதன் தேவன் முகம்நோக்கி :

"இறைவா! தாரும் இளைப்பாறல்"
என்றான்; எல்லாம் கடந்தவனோ ,
விரைவாய்க் கைகள் தனிலேந்தி
வேண்டு மட்டும் 'அது'தந்தான்!

...........................ஃ ஃ .........................

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (6-Apr-12, 7:07 pm)
பார்வை : 116

மேலே