[183 ] அவருக்கே இயேசென்று பேர்!

அவருக்கே இயேசென்று பேர் - இங்கே
அவரினும் சிறந்ததோர் இறையில்லை தேர்!
அவர்முன்னே தூசென்று சேர்! -உன்னை
அவர்க்களி! அதன்பின்னே மாசில்லை பார்!...(அவருக்கே)

மரியாளின் மகனானது ஏன்? -வானின்
மகத்துவம் விட்டு,அவர் பிறந்ததும் ஏன்?
தெரியாமல் இருப்பதும் ஏன்? -உன்னுள்
தெளிவின்றி வேறிறை தேடுதல் வீண்! (அவருக்கே)

தாவீதின் வம்சத்தைப் பார் -நம்மைத்
தாங்கிட அதில்வந்த ரட்சகர் ஆர்?
மாவீடும் உனக்களிப்பார்! -என்றும்
மரணமில் லா. ஒரு வாழ்வளிப்பார்! (அவருக்கே)

யூதரின் சிங்கமிங்கு ஆர்? -அந்த
யூசூப்பின் பிள்ளையாய்ப் பிறந்தவர் ஆர்?
வேதரில் வேதரிங்கு ஆர்? -மனிதர்
வினைவிட்டு எழ,என உயிர்விட்டது ஆர்? (அவருக்கே)

மனிதரில் ஒளிகாட்டினார் - அவர்
மனம்,மாறிப் பரமேற வழிகாட்டினார்!
கனி தர மரமேறினார்! -சிலுவை
காய்த்தது கனியதில் வரக்காட்டினார்! (அவருக்கே)

தினமிவர் பதம்பணிவாய்! -பகைத்
திறமழிப் பாய்,மனந் தெளிவுறுவாய்!
மனதினில் அமைதிகொள்வாய்! -உன்னை
மறக்கவும் மாட்டாரைக் கண்டுணர்வாய்!

அவருக்கே இயேசென்று பேர் - இங்கே
அவரினும் சிறந்ததோர் இறையில்லை தேர்!
அவர்முன்னே தூசென்று சேர்! -உன்னை
அவர்க்களி! அதன்பின்னே மாசில்லை பார்!...(அவருக்கே)
..ஃ... ....ஃ.... ....ஃ....

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (6-Apr-12, 6:40 pm)
பார்வை : 201

மேலே