கனவுடன் சாகிறேன்

(எழுத்து தள அன்பர்களுக்கு, இது சிறையிலிருந்து சில கிறுக்கல்கள் கதையில் வரும் பெண் கோணத்திலிருந்து எழுதப்பட்டது)

காலையில் எழும்பும் போது ஆறு மணியாகிவிட்டது. அம்மா சமையலறையிலிருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். "ஏழு கழுத வயசாவுது, இன்னும் அடுக்களையில ஒத்தாச செய்யுதில்ல. மைசூரு மவாராணின்னு நெனப்பு".

"அம்மா, நீ என்னப் பத்தி என்ன நெனச்சுட்டுருக்க? கழுத்து முழுசா நகையோட, கை முழுசா பணத்தோட ஒன்ன மாதிரி இன்னொருத்தன் வீட்டுக்குள்ள காலெடுத்து வச்சு, அடுப்பூதிட்டிருப்பேன்னு நெனச்சியா?", கேட்க வேண்டுமென்று தோன்றியது. கேட்கவில்லை. கேட்டால், "குட்டி கொழுப்பெடுத்துப் போய்க் கெடக்கா" என்று அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து விடுவாள். ஸ்கூலுக்கு நேரத்துக்குப் போய்ச் சேர முடியாது. பதினொன்றாம் வகுப்பின் முதல் நாளிலேயே லேட்டாகப் போனால் நல்லாயிருக்காது.

பல் தேய்த்து, குளித்து, துணிமாற்றி, அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கிளம்பும் போது மணி ஏழே கால். ஏழரை பஸ் கிடைத்தால் உண்டு இல்லையென்றால் இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இல்லையென்றால் அண்ணனிடம் கெஞ்ச வேண்டும்.

அண்ணனென்றால் சொந்த அண்ணனில்லை. பெரியப்பாவின் மகன் தான். பக்கத்தில் இருக்கும் பாலிடெக்னிக்கில் வாத்தியாராக இருக்கிறான். சம்பளம் வாங்கும் திமிரில் அவன் பண்ணும் அலப்பறை தாங்க முடியாது. இரவு பன்னிரெண்டு மணிக்கு மூக்கு முட்டக் குடித்து விட்ட வந்து கதவைத் தட்டுவான். அதுவும் சொந்தக் காசில் குடிப்பதில்லை. எவனாவது சோப்ளாங்கி கிடைத்தால் அவன் தலையில் முழுச்செலவையும் கட்டிவிட வேண்டியது. அவன் என்ன செய்தாலும் அம்மா எதுவும் சொல்ல மாட்டாள். மாசம் பிறந்தவுடன் இனாமாக அவன் கொடுக்கும் ஆயிரம் கிடைக்காமற் போய்விடக் கூடும். ஏதோ சொல்ல வந்துவிட்டு கடைசியில் அவனைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை.

பஸ் ஸ்டாப்புக்குப் போய்ச் சேரும்போது சரியாக ஏழரை பஸ் வந்தது. உயிர்மூட்டைகள் உள்ளே உட்கார்ந்திருந்தன. அவர்களின் நடுவே நானும் ஒரு மூட்டையாக.

பஸ் பாஸ் இன்னும் கிடைக்கவில்லை. பர்சில் ஐம்பது ரூபாய் தான் இருந்தது. சில்லறை இல்லை. கண்டக்டரிடம் கொடுத்தேன். வாங்கிவிட்டு இளித்துக் கொண்டே பாக்கிச் சில்லறையைக் கொடுத்தான். பின்னாடி என் பள்ளியில் படிக்கும் ஒரு சின்னப்பையன் உட்கார்ந்திருந்தான். பத்து வயதிருக்கும். கண்டக்டரிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். "சில்லற எடுல, காலைலயே உசிரெடுக்க வந்துருவானுவ" என்று தொடங்கினார். அவன் பரிதாபமாக விழித்தான். "அடுத்த ஸ்டாப்புக்குள்ள சில்லற எடு, இல்லன்னா எறங்கிக்கோ", சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்தார்.

அவன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்தான். ஸ்கூல் பேக்குக்குள் துழாவினான். எதுவும் வரவில்லை. கொஞ்ச நேரம் போனால் அழுது விடுவான் போலிருந்தது.

கண்டெக்டர் என்னிடம் கொடுத்த சில்லறையில் மூன்று ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினேன். அவன் வாயெல்லாம் பல்லாக "தேங்க்ஸ்கா" என்றான். காலையில் ஒரு நல்ல விஷயமாவது செய்திருக்கிறேன். சந்தோஷம்.


பள்ளிக்குள் நுழையும் போது எட்டே காலாகியிருந்தது. பயாலஜி குரூப்பில் எங்கள் பலம் அதிகமாகவே இருந்தது. பத்தாங்கிளாசில் பசங்க தனி கிளாஸ், பொண்ணுங்க தனி கிளாஸ். இப்போது அப்படிக் கிடையாது. பயாலஜி, கம்ப்யூட்டர், இரண்டே கிளாஸ் தான். எங்கள் வகுப்பில் ஏழு பசங்க தான்.

ஒருத்தன் கண்ணாடி போட்டுக் கொண்டு, குண்டாக இருந்தான். பார்த்தவுடன் இவன் தான் பப்ளிக் எக்ஸாமில் ஸ்கூல் ஃபர்ஸ்டாக வரப் போகிறான் என்று தெரிந்து விட்டது. பாக்கி ஆறு பேரும் சாமான்யர்கள் தான். கம்ப்யூட்டர் குரூப்பில் பசங்க தான அதிகமாக இருந்தார்கள்.
காலையில் ஒன்பது மணிக்கு அசம்பிளி. நான் தான் ஸ்கூல் லீடர். "அட்டென்ஷன், ஸ்டேன்ட் அட் ஈஸ்" இத்யாதி, இத்யாதி. தொடர்ந்த வகுப்புகள். பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி புராணங்கள். சாயங்காலம் பஸ்ஸில் ஏறும் போது கவனித்தேன். கம்ப்யூட்டர் குரூப் பையன் ஒருத்தனும் அதே பஸ்ஸில் ஏறினான். ரைட், பஸ் ரூட்டில் ஒரு புதிய ஆள். ஆனால் அவன் என் பஸ் ஸடாப்புக்கு பாதி இருக்கும் போதே இறங்கி விட்டான்.

இன்னும் கொஞ்ச நாட்கள். வழக்கமான வாழ்க்கை. அம்மாவின் திட்டுகள், அண்ணனின் அலப்பறை, அரக்கபறக்க அவசரம். இந்த் கொஞ்ச நாட்களில் இன்னொரு விஷயமும் வழக்கமாகி விட்டிருந்தது. அவன் எப்பொழுதும் நான் ஏறும் பஸ்ஸிலேயே ஏறத் தொடங்கியிருந்தான். அவன் நிதானமாக வந்தால் இருபது நிமிஷம் கழித்து வரும் இன்னொரு பஸ்ஸில் ஏறி வரலாம். ஆனால் அவன் அப்படி வருவதில்லை. ஏறியவுடன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். நான் இருக்கும் சீட்டை எனது பாப்கட் காட்டிக் கொடுத்து விடுகிறது. அவன் நின்று கொண்ட தான் இருக்க வேண்டும். அவனுக்கு முன்னால் பல உயிர்மூட்டைகள் உட்கார்ந்து விடும். அவன் நின்று கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பான். நான் திரும்ப மாட்டேனா என்று யோசிப்பானாயிருக்கும். எனக்கு இவை புதிதல்ல. எத்தனையோ பேர் இதற்கு முன்னாலும் இப்படிப் பண்ணியிருக்கிறார்கள். அதிலும் இவன் அவ்வளவு worthy personality கிடையாது.

அவன் தொடர்ந்து என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான். பேசுவதில்லை. வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பான். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தான். எதுவும் பேசியதில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பு லீவில் எனக்கு ஒரு போன் வந்தது. அவன் தான் பேசினான். அவனது நடையைப் போலவே பேச்சும் வேகமாகத் தான் இருந்தது. அடுத்த நாள் எஸ்.எம்.எஸ்சில் propose பண்ணினான். இது இன்னும் வேகம். இது அப்பாவுக்குத் தெரிந்தால், தப்பு என் பக்கமில்லையென்றாலும் என்னை மேலே படிக்க விட மாட்டார். அவனுக்கு என்னைப் பிடித்திருப்பது ஆச்சரியமில்லை. ஆனால் எனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்பதை எப்படிப் புரிய வைப்பது?

இது வரைக்கும் அவனைப்பற்றி உங்களிடம் சொன்னதில்லையல்லவா? இப்போது சொல்கிறேன். எனது முடியின் நிறம் அவனுக்கு. டொக்கு மாதிரி ஒரு சோடாபுட்டிக் கண்ணாடி. புரோக்கர் மாதிரி ஸ்கூல் பேகை அக்குளில் அடக்கிக் கொண்டு வருவான்.

எங்களுக்கு வெள்ளிக்கிழமை கலர் டிரஸ். அன்றைக்கு தொளதொளவென்று ஒரு சட்டையும், பேன்ட்டும் போட்டுக் கொண்டு வருவான். அவனது அப்பாவின் உடையென்று நான் நினைக்கிறேன். எங்கள் வட்டாரத்தில் அவனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது."சைக்கோ". இப்படிப்பட்ட ஒருத்தனை நான் எப்படிக் காதலிக்க முடியும்? ஒவ்வொருத்தியும் எனது வயதில் அவளது புருஷனைப் பற்றி நூறு கனவுகளை வைத்திருப்பாள். எனக்கும் அப்படித்தான். ஆனால் எனது ஒரு கனவைக் கூட அவனால் நிறைவேற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. நான் இளவரசனுக்காக ஆசைப்படவில்லை. அதே நேரத்தில் ஒரு அரைப் பைத்தியத்தை எவளால் ஏற்றுக் கொள்ள முடியும்? இவன் இப்போது ஒரு தொல்லை. அப்பாவுக்குத் தெரிந்தால் நல்லாயிருக்காது.

அண்ணன் இரவில் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தான். அவனிடம் போனை எடுத்து நீட்டினேன், "ஒருத்தன் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றாண்ணா". அண்ணன் அவனைப் போனில் பிடித்து காதால் கேட்க முடியாத, கையால் எழுத முடியாத வசை மொழிகளால் திட்டினான். எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. அன்றிலிருந்து எனக்கு அவன் போன் பண்ணுவதில்லை. பயந்து போயிருப்பான்.

ஒரு இன்ஜினீயரிங் காலேஜ். நாலு வருடங்கள். ஜூனியர்களும், சீனியர்களுமாக இருபத்திரண்டு காதல் கடிதங்கள். அவனை மறந்தே போனேன்.

நான்காவது ஆண்டில் ஒரு நாள். காலேஜிலிருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். காலேஜ் வீட்டுக்குக் கிட்ட தான் இருந்தது.

அவன் என் எதிரே வந்து கொண்டிருந்தான். அதே தொளதொள சட்டை, சோடாபுட்டிக் கண்ணாடி. எனக்கு எதிராக நடந்து வந்து கொண்டிருந்தான். அதே வேகமான நடை. நான் மெலிதாக அவனைப் பார்த்து சிரித்தேன். அவன் சிரிக்கவில்லை. வேகமாக வந்து கொண்டிருந்தான். என் அருகில் வந்து என் கழுத்தைப் பிடித்தான். அவனது முரட்டுக் கரம் கழுத்தில் பதிந்தது. விட்டுவிடுவான் என்று நினைக்கிறேன்....

எழுதியவர் : (6-Apr-12, 11:00 pm)
பார்வை : 653

மேலே