இப்படியும் சிலர்!

சமீபத்தில் என் தோழியுடன் கோயிலுக்கு சென்றிருந்தேன். அங்கே நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுதியது!  இல்லை வேதனை படுத்தியது என்றே கூறலாம். கோவில் உள்ளே செல்லும் முன் அங்கிருக்கும் ஒரு கடையில் அர்ச்சனை தட்டு வாங்க சென்றோம். அங்கிருந்த பெண்மணி எங்கள் காலணிகளை அங்கேயே வைத்து செல்லும் படி கூறினார். "பாதுகாப்பாக இருக்கும்" என்று கருதி நாங்களும் எங்கள் காலணிகளை அந்த பூக்கடையில் விட்டு சென்றோம்.
தரிசனம் முடித்து வந்து பார்த்த போது, என் தோழியின் செருப்பு மட்டும் காணாமல் போயிருந்தது. அப்பெண்ணிடம் கேட்டதற்கு " நல்லா தேடி பாருங்கள், இங்க தான் இருக்கும்" என்றார்.  அங்கு எங்கு சுற்றி தேடியும் கிடைக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இருந்து அக்கோயிலுக்கு வந்திருந்தமையால், வேறொரு செருப்பு வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.
"இங்க பக்கத்துல செருப்பு கடை இருக்கா?" என்று வினவினோம். அதற்கு அவர், "அதோ அங்க ஒரு  கடை இருக்கு பாருங்க!" என்று ஒரு 10 அடி தூரத்தில் உள்ள கடையை காட்டினார்.
அந்த பெண்மணி காட்டிய கடைக்கு சென்றோம்.  கடைக்காரர்  சில செருப்புகளை எடுத்து காண்பித்து கொண்டிருந்தார். அங்கு "டிஸ்ப்ளே" வில் உள்ள காலணிகளை பார்த்துக்கொண்டிருந்தோம்.  அப்போது "டிஸ்ப்ளே" வில் அவளுடைய செருப்பு வைக்க பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனோம்.  நாங்கள் கோவிலுக்குள் சென்று திரும்பும் வேளையில், அந்த செருப்பை நன்கு துடைத்து பாலிஷ் செய்து, ஒரு லேபில்-யையும் ஒட்டி புது காலணியை போல் வைத்திருந்தார். அந்த செருப்பு அவளுடைய காலின் அளவுக்கு சரியாகவும் இருந்தது. மேலும் தற்போது தான் துடைத்து, பாலிஷ் செய்திருப்பது நன்கு தெரிந்தது. பூ விற்கும் பெண்மணியும், செருப்பு விற்கும் ஆசாமியும் சேர்ந்து செய்யும் வேலை என்பதை புரிந்துகொண்டோம்.
கோவிலுக்கு சென்று அமைதியாக வீடு திரும்ப வேண்டும் என்ற காரணத்தினால் நாங்கள் இதுப்பற்றி அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. நல்லா நாலு வார்த்தை அவரை  கேட்டு வந்திருக்க வேண்டும். எங்களை போல் சிலர் இதை அப்படியே விட்டு விடுவதால் அவர்கள் செய்யும் குற்றம் அதிகமாகுமே தவிர குறையாது.  நாங்கள் பேசாமல் வந்ததை நினைத்து பின்னர் வருந்தினோம. 95 ரூபாய்க்கு வாங்கிய செருப்பை மீண்டும் காசு கொடுத்து அவர் சொன்ன விலையான 110 ருபாய்க்கு வாங்கினோம்.
பூ விற்று சம்பாதிப்பது மட்டுமில்லாமல் இப்படியும் (கமிஷன்-காக) சம்பாதிக்க துணிகிறார்கள். இந்த சம்பவத்தை நினைக்கும் போது, திரைப்படங்களில், வேண்டுமென்றே ஆணியை கொண்டு சைக்கிள், கார் போன்றவற்றை பஞ்சர்(puncture) செய்து அவர்கள் கடைக்கே கூட்டிசெல்லும் காட்சி தான் நினைவுக்கு வந்தது. அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இலவச காலணிகள் விடும் இடத்தில் காலணிகளை விடுவது நல்லது என்பதை புரிந்துக்கொண்டோம்.

எழுதியவர் : panithuli (7-Apr-12, 3:43 pm)
பார்வை : 659

மேலே