[196 ] சில குறுந்தொகைச் சிந்தனைகள்.. ..

........ கூட்டு ...........

வீட்டில் மனைவி கூட்டிய குழம்பைச்
சூட்டுடன் அருந்திச் சுவையென மகிழ்ந்து
மாட்சிமை பேசும் மனத்தினன்
ஆட்சிசெய் யானோ அவள்நேஞ் சினிலே !

===

.......யாரால் உண்டிவ் வுலகம்.....

யாரால் உண்டிவ் வுலகம்; ஈங்கது
கூறாய் என்போர் கேட்டிடக் கடவர்:
காட்சிக் கெளியன், கடுஞ்சொல் தவிர்ப்பான்,
தாழ்ச்சி பேசான், தமர்எனப் பழகுவான்,
வீழ்ச்சி மகிழான், வெறும்சொல் கிளறான்,
கொண்டது பகிர்வான், குளிர்ந்த சொல்லுவான் ,
அண்டினோர்க் குதவுவான் , அமைந்த வாயினன்,
பண்டில்லை, இன்றும் பார்க்க
உண்டாம் அம்ம , உலகிது தானே!
=====௦=========
.........................குற்றமில் உலகம் .........................

வெஞ்சொல் பொறுப்பான், வெகுளி தவிர்ப்பான்,
அஞ்சல் எனக்கை அணைக்கவே நீட்டுவான்,
வஞ்சனை நினைக்கான், வழக்குகள் விரும்பான்,
வெற்றியில் குதியான், வெறிஎதும் அறியான் ,
உற்றது சகிப்பான், உளதால்
குற்றமில் உலகம் கொடுந்தொலை விலையே!
-௦-
Dr.கன்னியப்பன் அவர்கள் சந்தேகப்பட்டது சரியே!
இந்த இரண்டு பாடல்களில் முதலாவது மட்டுமே குறுந்தொகைப் பாடலின் உந்துதலில் பிறந்தது.
அது எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய பாடல் 167 - "முளிதயிர் பிசைந்த காந்தள் மென்விரல்" என்று தொடங்குவது.

இரண்டாவது பாடல் : புற நானூற்றுப் பாடல் 182 -இன் அடிப்படையில் பிறந்தது.அதன் தொடக்கம்
" உண்டா லம்மா,இவ் வுலகம் " என்பது.
தவற்றிற்கு வருத்தமும், திரு. கன்னியப்பன் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (12-Apr-12, 7:52 am)
பார்வை : 198

மேலே