இப்படிக்கு கவிஞன்..........

*பெருமலை சிதைத்து
கூழாங்கல்லாய்,
ஒருசிறு கல்லை
பிதுசூன் மலையாய்,
வார்த்தையில் வடித்திடும் வல்லமை
அறிவேன்....
*கவிதை பலர்க்கு தொழில்,
அது எமக்குத் தவம்.....
*உதிர்ந்த மலரொன்றை கிளையில் ஒட்டிட,
மெலிந்த பிறைநிலவில் பௌர்ணமி சமைத்திட,
உலர்ந்த கள்ளிகாட்டிலோர் இந்திரலோகம் செய்திட,
எம்மால் இயலா,
எம் கவிதைகளால் இயலும்.....
*காகித கருப்பை.....
ஹார்மோனோடு கசிந்தொழுகும் தமிழ்.....
பேனா நுனி தொப்புள்கொடி அறுக்க,
பத்திக்கு பலநூறு கவிதை சிசுக்கள்......
மறு பக்கம் திருப்புகையில்
சிலநொடிகள்,
பிரம்மனாய் சுவாசிக்கிறேன்....
*தமிழெனும் மயிலிறகில் காதுகுடைவதில்லை என் கவிதை,
அது மேற்தசை இல்லா ரத்த நாளங்களை
வருடி கொடுக்கிற உணர்வின் உள்ளீடுகள்.....
*தனித்த தீவிலொரு
தனி குடில் அமைத்து,
தென்னம் கீற்றில் கதவு தரித்து,
நான்திசை முகப்பும் சாளரம் வைத்து,
கீற்றிடை தெறிக்கும் அலைக்கடல் சாரலில்,
மூச்சு திணற மேனி சிலிர்த்து,
கீற்றிடை கசியும் பால்பிறை ஒளியில்,
கோரைப்பாய்யதை நெடுக விரித்து,
சாளரம் ஊடே நிலவு ரசித்து,
பாவேந்தன் வரிகளை பசியுடன் படித்து,
பாரதி கவியதை தலைமாட்டில் வைத்து,
செல்மாவிற்காக ஜிப்ரான் தொடுத்த
காதல் வலி(ரி)களை படித்துக்கொண்டே,
என்மானுடல் விட்டு
உயிர் பிரிந்திடட்டும்
ஷிரினுக்காக நிஜாமி சிந்திய
கவிதை கண்ணீரில்
உருகிய பிதுசூன் மலை
உச்சியில் எனக்கென்று கல்லறை கட்டுக,
"கல்லறை புகினும்,
கவிதைகளுடன் புதைக்க",
என் கவிதைகளின்,
மெய்யெழுத்து புள்ளி துவாரத்தின் ஊடே சுவாசித்திருப்பேன்,
காரணம்
என்னுடல் எருவாகும்,
என்கவி உயிர்வாழும்....
இப்படிக்கு,
கவிஞன்........