கொழு கொழு குழந்தை
கொழு கொழு குழந்தை
கொஞ்சிச் சிரிக்குது
சிறு சிறு சில்மிஷம்
செய்து நகைக்குது....!
முட்டு முட்டு என்று சொன்னேன்
முட்ட முட்ட வந்தது
கிட்ட கிட்ட வந்து வந்து
முத்தம் கன்னம் தந்தது.......!
பன் எனும் கன்னங்கள்
புஸ் என இருந்தது
கண் படும் என வைத்தேன்
கருநிற திருஷ்டிப் பொட்டு.....!
கும்முன்னு சிரிக்குது
குதூகலம் பெருகுது
குழந்தையை ரசிக்கையில்
கொண்டாட்டம் நிறையுது.....!
பிஞ்சிக் கைகளால்
மூஞ்சில் அறையுது
கொஞ்சும் கால்களால்
உதைத்து சிரிக்குது........!
சிறுநீர் மலமும் மடியில்
சிந்தியும் சீ என வெறுக்க
சிந்தைக்குள் இயலலை
சிரிப்பே வந்தது சிறு குழந்தை குறும்பு.... !
ரசித்தேன் கற்பனையில்
மகிழ்ந்தேன் மனதினில்
விழிகளின் எதிரிலே
சுவரினில் குழந்தைப் படம்......!
திருமணமாகி இருபது வருடங்கள்
தந்தை ஆகும் தகுதி எனக்கில்லை என்று
தகுதி சொன்னது மருத்துவ உலகம் - தன்
தாய்மை உணர்வில் என் தலை கோதியே
மார்பினில் சாய்த்தாள் என் துணைவியே....!
இயலாமை நினைத்து என் இதயத்தோடு
இரு விழிகளிலும் கசிகிறது ரத்தக் கண்ணீர்
அப்பா......அப்பா......எனும் சப்தம் கேட்டு
அண்ணாந்து பார்க்கிறேன் மேலே.......
அந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த
அழகான குழந்தைப் படம்
ஆறுதலாக எனைப் பார்த்து சிரித்தது.......
எனினும்........அணைத்திருந்த போது - தன்
தோளினில் என் கண்ணீர்த் துளி படவே
துக்கமாக எனைப் பார்த்து......
என் கன்னத்தை துடைத்து விட்டாள்
எனது அருமைப் பத்தினி........
ஐயஹோ.......
அவளுக்கு எப்படி நான்
ஆறுதல் சொல்வேன் ?