இது ஒரு புலம்பல்தான் !

விதியின்
வீதியில்
நீயே
விழுந்து கொள்வதற்கு
வெள்ளை பூசிய
தடைக் கல்தான்
சிகரெட் !

புற்றுக் கிருமிகள்
வெற்றிகள் கொண்டு
உன்னை வீழ்த்துதற்கு
கங்குப் பொட்டை
நீயே
வைக்கிறாய்
காலனுக்கு !

மதுகூட
குடிப்பவனை
அவன் குடும்பத்தை மட்டுமே
அழிக்கிறது;
பாவி நீ
விடும் புகை
உன்னைச் சுற்றி நிற்கும்
பலபேரையும்
அந்தப் பலபேரின்
குடும்பத்தையும்
அல்லவா கொல்கிறது?

உதிர்ந்து
போவது
சாம்பல் அல்ல
உன் உயிர் !

கவிதை எழுத
பேனா பிடி !
அது என்ன
நெருப்புத் துண்டேந்தி
நீர் மாலைக்கு ஏங்குகிறாய்?

பற்ற வைக்கும் போது
பதற்றமும்
இழுக்கும் போது
பரவசமும்
முடியும் போது
ஏக்கமும்
தரும் ஒரு சுகம் என்றே
எல்லோரும் நினைக்கின்றோம்;
ஆனால்
பற்ற வைக்கும் போது
உன்னையும்
இழுக்கும் போது
உன் குடும்பத்தையும்
முடிக்கும் போது
இந்த நாட்டின்
ஒரு குடிமகனையும்
கொல்லப் போடும் சூத்திரம்
என்பது
சுடுகாடு போன பின்னால்
நமக்குப் புரிவதுதான் சோகம் !

ஆரோக்கிய அணுக்களை
ஏன் இப்படி
சுட்டுக் கொல்கிறாய்?
அந்த நிக்கோடின்
கயிறாலே
ஏன் தூக்குப் போட்டுக் கொள்கிறாய்?

ஒருமையில் வந்து
உன் பன்மைகளை
வென்று போக
அனுமதிக்கலாமா ?
வறுமையில் வீழ்ந்தாலும்
இந்த எருமையில் ஏறி
வானுலகம் செல்ல
விரும்பலாமா ?

செலவை விடு
உன் செல்களைப் பார் !

உலகை விடு !
உன் சுற்றம் பார் !

சிகரெட்டை விடு !
வெற்றியின்
சீக்ரெட்டை எடு !

எழுதியவர் : முத்து நாடன் (26-Apr-12, 11:49 pm)
பார்வை : 228

மேலே