உயிருள்ள பேய்கள்-1

பேய் உண்டா?
ஆவி உண்டா?
இந்த பூமியில்தான்
இரத்தக் காட்டேரி
இருக்கிறதா?
இருக்கு என்பேன்
அதனால் நான்
ஆஸ்திகன் அல்ல
இல்லை என்பேன்
அதனால் நான்
நாத்திகனும் அல்ல
என்னுள்ளும் வந்ததோ பேய்?
பகைமை கொண்டவன்
பயங்கரப் பேயாவான்
அடுத்தவர் வாழ்வை
அழிக்க நினைப்பவன்
அலையும் ஆவியாவான்
அடுத்தவன் உழைப்பை
உறிஞ்சி குடிப்பவன்
இரத்தக் காட்டேரிதான்.
இவர்களெல்லாம்
இந்த உலகில் உலவும்
உயிருள்ள பேய்கள்.
தேர்தல் வந்துவிட்டால்
உயிருள்ள ஆவிகள்
உலா வரத்தொடங்குவார்கள்
வாக்குகளை அள்ளுவதற்கு
வாக்குறுதிகளை வாரி
வள்ளல்போல் வழங்குவார்கள்
பாசத்தோடு வருவார்கள்
பாசக்கார பேய்கள்.
பெரிய திரையில்
சின்னத்திரையில்
சிரித்துக்கொண்டு வருவார்கள்
அழுதுக்கொண்டு வருவார்கள்
சிந்திக்க விடாமல்
சிறுமூளை பெருமூளையை
சிதைத்துவிடுவார்கள்
அரிதாரம் பூசிக்கொள்ளும்
அழகான பேய்கள்
இப்படி
இந்திய திரு நாட்டில்
இருக்கு பேய்கள் நிறைய
அவ்வப்போது எழுதுவேன்
அப்பேய்களைப் பற்றி நிறைய
இருக்கு என்பேன்
அதனால் நான்
ஆஸ்திகன் அல்ல
இல்லை என்பேன்
அதனால் நான்
நாத்திகனும் அல்ல
என்னுள்ளும் வந்ததோ பேய்?
………………………………………………(தொடரும்)