தன்னம்பிக்கை துளிர்கள்

ஆயிரம் தடைகள் ,
அத்தனைக்கும் முற்றுப்புள்ளி ,
தன்னம்பிக்கை !

பிறந்த குழந்தை நிற்பதும் ,
நின்ற குழந்தை நடப்பதும் ,
நடந்த குழந்தை ஓடுவதும் ,
தன்னம்பிக்கையின் சாரம் அல்லவா !

சிந்திக்க தெரியாத விதை கூட
முளைத்து,
வளர்ந்து மரமாகும் போது ,
சிந்திக்க தெரிந்த நான் ஏன்
முடமாகி கிடக்கவேண்டும் !

கற்ற கல்வி ,
பெற்ற அனுபவம் ,
முதலுக்கு பணம் ,
எல்லாம் ஓரம் தள்ளி
இறுதியாய் பிடித்தேன் ஓர் ஆயுதம் ,
" தன்னம்பிக்கை " !

போனது போகட்டும் ஆயிரம்
வாய்ப்புகள் ,
நாட்கள் மாதிரியே நேற்றை மறந்து ,
இன்றையையும் ,
நாளையையும் ,
கவனமாய் எதிர்பார்கிறேன் !

தோல்விகள் ஒவ்வொன்றும்
எனக்கு பாடங்கள் கற்பதில் ஆசானாக ,
வெற்றிக்கான பதில்களை,
தோல்வியின் கேள்விகளில் ,
தீவிரமாய் தேடுகிறேன் !

துன்பங்களின் காயங்களால்
ஏற்பட்ட வடுக்களில் ,
ஒவ்வொன்றிலும் அனுபவங்களை ,
பதித்திருக்கிறேன் நியாபக சின்னங்களாக !

மரத்தின் மேல் கூடு கட்ட
இடமில்லாவிட்டாலும் பரவாயில்லை ,
தொங்கியாவது வாழ கற்றுக்கொள்கிறேன்,
தூக்கனான் குருவியாய்!

பழுத்து விழும் இலைகளிடமிருந்து
வாழ்க்கை பாடங்களை ,
பக்குவமாய் கற்றுக்கொள்கிறேன் ,
பச்சை இலையாய் !

மாட மாளிகைகளை
கண்டு மயங்காமல் ,
கூரை வீட்டையும்
கோவிலாக மதிக்க தெரிந்து கொண்டேன் !

ஆமையாய் பிறந்ததையும்
நேசித்து ,
நத்தையாய் பிறக்காததற்கு ,
ஆறுதல் கொள்கிறேன் !

இயற்கையின் தத்துவத்தில் ,
வீழ்கின்ற பந்தும் எழும்பும் ,
என்கின்ற தத்துவத்தை
தாரகமந்திரமாக கொள்கிறேன் !

ஒடமுடியவில்லையே என்ற
வருத்தத்தை ஓரம்கட்டி ,
ஊனமில்லாமல் நடக்கிறேன் என்பதால்
ஆறுதல் கொள்கிறேன் !

இமயம் ஏற ஆசைப்பட்டு ,
பள்ளத்தாக்கிற்கு பணியாமல் ,
நடுநிலையாய் வாழ்வதில் ,
நம்பிக்கை கொள்கிறேன் !

மரங்கள் வருடம் முழுவதும்
பசுமையாகவே வாழமுடியுமா ,
மனிதனும் அப்படித்தான் ,
என் இலையுதிர் காலம் முடிந்தது ,
இனி வசந்த காலம் ,
துளிர்ப்பேன் என்ற நம்பிக்கையில்
துடித்துக்கொண்டிருக்கிறேன் !

இப்படிக்கு
தன்னம்பிக்கை !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-May-12, 12:19 pm)
பார்வை : 371

மேலே