களம் காண்போம் கவிகளே
---- களம் காண்போம் கவிகளே -----
பேனாவை பேசவிட்டு
ஊமையாக உட்கார்ந்திருக்கும்
என் சக கவிஞர்களே!
வார்த்தை கருவில்
வாள் வீரர்களை
வளர்த்தவர்களே!
பாரதியை படித்து வளர்ந்த
பராகிரமர்களே!
உறங்கிய மக்களை
எழுத்துபணியில்
எழுப்பிவிட்டோம்
களப்பணி செய்யாமல்
ஏனோ நாமே உறங்கிவிட்டோம்.
கேட்டுவிட்டால் கேட்பவர்
காது கிழியும்
வேட்டு சத்தம் போல
வெடித்து அதிரும்
பாட்டுகள் பல எழுதிவிட்டோம்
வீட்டில் இருந்தபடி.
எழுதபடிக்க தெரியாத
ஏழை மக்கள்
ஏகோபித்த தேசத்தில்
எதுகை மோனை கொண்டு
எழுதும் கவிதைகள்
எதற்கு?
பெண் சிசுக் கொலை
பெருத்த நாட்டில்
பாரத தாய் படமெததற்கு ?
வானம் என் வசமிருக்கும்
நீல கைகுட்டையென
காலப் பொய் சொல்லும்
கவிஞர்களே!
வாசலை தாண்டும்
வயஞானமின்னும்
வரவில்லையோ?
உயிருக்கஞ்சாத நல்
வயிர நெஞ்சமொன்று
உனக்கில்லையோ?
வேண்டாம் இனியொரு போரென்று
மாண்ட மனிதர்கள் நிலை கண்டு
ஏண்டா இந்த வெறியென்று
மாஉலக அமைதிக்கு
மையெழுதி
மனு செய்தவர்களே !
மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டால்
ஏகாதிபத்திய
காண்டா மிருகங்கள் சேர்ந்துவிட்டால்
என்ன செய்வாய் கவியே !
எதிரியை அழிக்கும் ஆயுதம்
எதுவென்று கேட்டு வை.
எதற்கும் பேனாவுக்குள் கொஞ்சம்
தோட்டாக்கள் போட்டு வை.
அறைக்கூவல் விடுத்து விடுத்தே
அரைக் கிழவர்களாகிவிட்டோம்.
களையெடுக்கும் கலை அறியாது
கையில் அரிவாள் ஏந்திய - உதவா
கரைக் உழவர்களாகிவிட்டோம்.
எழுத்தைக் கொண்டு எதிரி
கழுத்தை அறுக்கும்
குணத்தையும் வளர்த்து கொள்.
அதே எழுத்தால் இன
கருவை காக்கும்
அறுவை சிகிச்சையும்
அறிந்து கொள்.
சுதந்திரத்திற்கு பின்
சும்மாயிருக்கும்
சுதேசிகளை
சுடர்களேன்று நம்பாதே !
சுரணையுள்ள வீரியனாய்
சுயமான சூரியனாய்
இரு கவியே
சூட்சியுன்னை நெருங்காதே!
பார்வையற்றவர் நிலை வருந்தி
பரிதாப கவி எழுதி
பாராட்டுக்கு ஏங்கி நிற்கும்
போராட்ட கவி கூட்டமே!
கண்தானம் செய்யப்பா
செயலில் உய்யப்பா
உண்மை கவிஞன் நீயென்று
உலகம் போற்றுமே !
புத்தகம் தத்துவம்
காதல் சாதலேன
காகிதம் நிரப்பிய
கவிதை சுரப்பியே !
பாட்டுகள் பல
எழுதியது போதும்
எழுந்து வா...
பாட்டாளி துயருணர
புழுதியில்
விழுந்து வா..
வறுமை தாண்டி எழுதப்பா - தேச
ஒருமை வேண்டி எழுதப்பா.
கண்டன இரங்கல்
கவிதைகள் எதற்கப்பா ?
கண்டம் தாண்டி
ஊர்வலம் நடத்தப்பா?
தீயை மூட்ட இன்னொருவன்
எதற்கப்பா ?
நீயே களத்தில் தனித் தீயாக
இறங்கப்பா.
சிந்தனை முத்தம்
தேனாகுமா ?
சிந்திய ரத்தம்
வீணாகுமா ?
என் சகக் கவியே
போதுமட நம் மக்கள் அழுது அழுது
போனதட பொழுது பொழுது
எடு பேனா எழுது எழுது
வரும்தானா விருது விருது.
--- தமிழ்தாசன் ----