மௌனம் அமைதி நிசப்தம்

மௌனம் அதிசுக ராகம் அதுவொரு
மந்திரம் மனதின்சு கந்தம்
மௌனம் உள்மதி ரூபம் இறையின்சன்
மானம் தூயநல் மார்க்கம்
மௌனம் அகமிடை தியானம் இருளது
மாற்றும் இறைமையைக் கூட்டும்
மௌனம் ஆயுத மாகும் நலிவுறு
மனதை தைரிய மேற்றும்

அமைதி அலைகடல் தூக்கம் அகமிடை
ஆற்றல் தனைதினம் தோற்றும்
அமைதி அநுபவ இன்பம் தனிமையின்
ஆக்கம் புதுசுகம் சேர்க்கும்
அமைதி அழகினைக் கூட்டும் அதிபகை
ஓட்டும் உயர் சுகம் காட்டும்
அமைதி பெருகிட ஆள்மை யுடன்மன
அறியா மையின்முடி வாகும்

நிசப்தம் நினைவெழ நீசம் மடிந்திடும்
நீக்கும் கறை சுவை சேர்க்கும்
நிசப்தம் நினைவுடல் போர்க்கும் நிம்மதி
நிகழ்வில் நேர்கொளும் பார்வை
நிசப்தம் ஊற்றிடும் தேனை உலகினில்
நிலவும் இனிமையை காக்கும்
நிசப்தம் காற்றின்சங் கீதம் இசைப்பதும்
நிகரில் பிரபஞ்ச தோற்றம்

ஞானம் பெரிதெனக் காணும் உளமதும்
ஞாலம் மிடை உயர்வாகும்
ஞானம் அறிவிலை யாகும் மனதெழு
ரோகம் போக்குங் கஷாயம்
ஞானம் இதுவரை காணா துயருடை
நீளும் வானெழு மேகம்
யானும் பெற்றிட ஞானம் உலகினை
ஆளும் தீயருள் தாராய்!

எழுதியவர் : கிரிகாசன் (12-May-12, 11:18 am)
பார்வை : 693

மேலே