விடியல் வேண்டும்

இரவில் நிலவில் தேவதை தூங்குவதாகப்
பாட்டிசொன்ன கதை கேட்டு அதைக் காண
கண் விழித்திருந்த " பௌர்ணமி இரவு "
சரித்திரத்தில் மாவீரன் ப்ரித்விராஜனின்
கதை கேட்டு என்னைக் கூட்டிச் செல்லவும்
வருவான் ஒருவன் குதிரையில் என்று
காத்திருந்த "காதல் இரவு "
உயிர்த்தோழியின் மரண செய்தி கேட்டு
விம்மி விம்மி அழுத "துக்க இரவு "
பள்ளி நாடகத்தில் சீதை வேடமிட்டு
ராமனிடத்தில் போடவேண்டிய மணமாலையை
ராவணனிடத்தில் போட்டதை நினைத்து
"வெட்கிச் சிரித்த இரவு "
நள்ளிரவில் துப்பறியும் நாவலில் முகம்
புதைத்து வியர்த்து வியர்த்துப் படித்த
"திகில் இரவு "
எங்கோ கண்டெடுத்த யாரோ ஒருவரின்
அந்தரங்க டைரியைப் புரட்டி புரட்டிப்
படித்த "மர்ம இரவு "
இதுபோல் ,
என்னும் எத்தனையோ இரவுகள் என்
வாழ்வில் விடியாமலே இருக்கின்றன..