இலக்கியக் காதல்! இன்பம்...
பாவலர் தமிழறிவன் இடிமுரசார் இயற்றிய ஒரு அருமையான கவிதையை இங்கே அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இலக்கியக் காதல்! இன்பம்...
“பால்முகம் தாமரைப்பூ! பாதம் அனிச்சப்பூ!
நீள்விழி நீலப்பூ! நங்கைகை – காந்தள்பூ!
ஆவல் நகிலிரண்டும் வாழைப்பூ! ஆதலினால்
பூவைக்கு அங்கமெல்லாம் பூ!
கற்பனைத் தோட்டத்தில் காதற்பூக் கொய்திட
அற்புதக் கன்னியின் கன்னத்தை – பொற்பாய்த்
தடவியே மார்பகத்தில் தண்டமிழ்ப்பால் மாந்திக்
கிடந்தேன் மகிழ்ச்சிக் கடல்!
வஞ்சிக் கொடியாளே! வண்ணப் பொழிலாளே!
பஞ்சின் அடியாளே! பாவையே! – அஞ்சுகமே!
நெஞ்சினிலே வீடுகட்டி நாமிருவர் ஒன்றிணைந்து
மஞ்சத்தில் கொஞ்சலாம் வா!”
ஆதாரம்: தமிழ் மாருதம் – மார்கழி - 1999
பாவலர் தமிழறிவன் இடிமுரசாரின் கவிதை நயத்தைப் பாருங்கள். இடிமுரசில்லை! ஆனால் தென்றல் வீசுகிறது. இனிய தமிழ்த் தென்றல்.
பூவையை சொற்பூக்களால் அர்ச்சிக்கிறார். அங்கமெல்லாம் பூக்களாகக் காண்கிறார். முகத்தை தாமரைப்பூவாக, பாதம் அனிச்சப்பூவாக, காண்கிறார். மார்பகங்களை எடுத்துச் சொல்ல நயமான ’நகில்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதுபோல வஞ்சிக் கொடியாளின் கண்களை 'நீள்விழி நீலப்பூ' என்று வர்ணிக்கிறார்.
கற்பனைத் தோட்டத்தில் காதற்பூக் கொய்ய ஆவல் கொள்கிறார். தண்டமிழ்ப்பால் அருந்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்க விழைகிறார். தமிழை வஞ்சிக் கொடியாகவும், வண்ணப் பூஞ்சோலையாகவும் கண்டு நெஞ்சினில் வீடு கட்டி நெஞ்சமே மஞ்சமாக கொஞ்ச தமிழாகிய பெண்ணை அழைக்கிறார்.
பாவலர் தமிழறிவனின் தமிழ்ப் புலமையும், கவிதை நயமும் மீண்டும் மீண்டும் இக்கவிதையை வாசிக்கத் தூண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.