இறைவா இந்தப் பூமியைப் புதைத்துவிடு ...!?
இனியாவது பூமித்தாய் ....
பூகம்பமாய் வெடித்துச் சிதறமாட்டாளா ..?
தமிழ்த்தாய் தன் கண்ணீரால் ..
ஓராயிரம் ஆழிபேரலையை ..
உருவாக்கி உருத்தெரியாமல் ..
இந்தப் பூலோக உருண்டையை
மண்ணோடு கரைக்கமாட்டாளா...?
இசைப் பிரியாவின் ...
கடைசிக் கதறலை ...
அந்தச் செவிட்டுக்கடவுள் ..
கேட்கவே இல்லையா ..?
இல்லை ..
கண்ணிருந்தும் குருடனாய் ..
காதிருந்தும் செவிடனாய் ..
வாயிருந்தம் ஊமையாய் ..
இன்னும் மௌனமாய் இருக்க ..
அந்தக்கடவுளும் ...
நம்மைபோன்றே வெறும்
மனிதப்பதர் தானா ...?
ஆசையைத் துறந்த ..
புத்தனுக்குப் பின்னால் ..
தாய் மாரையும் ..
காமத்தோடு பார்க்கும்
எத்தர்கள் கூட்டம்...
அதை எட்டிப்பார்க்க ..
நம் நாட்டிலே எட்டப்பர்கள் கூட்டம் ..?!
ஒன்பதுக்கோளில்...
ஒன்றுக்குறைந்தால்..
ஒன்றும் நட்டமில்லை ...
இரக்கமில்லா இறைவா ..
இந்தப் பாவபூமியை ...
எங்காவது விண்ணில் புதைத்துவிடு ..!?
நாளய வராலாற்றில் ...
இவர்கள்தான் மனிதர்கள் என்று ...
ரத்தக்கரைகளால் எழுதி ...
நீ அசிங்கப்படாதே ...!?
கோழை நான் ...
குடும்பக் கூட்டில் அடைப்பட்டுக்கொண்டு ..
கோபமாய்க் கொதிக்கிறேன் ...
சட்டியில் கோழிக் கொதிப்பது போல் ...
வார்த்தையில் வாளெடுத்த வீரம் ...
இதயத்தில் பெருக்கெடுத்த ஈரம் ..
கவிதையில் கனலாய் எரிந்தது ...
மற்றப்படி ..
நானும் மனிதப்பதர் தான் ...
என்ன செய்ய முடிந்தது ...இதைத்தவிர ?
நீக்கமற நிறைந்திருக்கும் ....
வேஷதாரி இறைவா ...
போதும் உன் விபரீத விளையாட்டு ...
இந்தப் பூமியைப் புதைத்துவிடு ...
இல்லையெனில் நாளை
உந்தாயிர்க்கும் இதேகதித் தான் ....
உன்னால் தாங்க முடியுமா ?
இந்தப் பூமியைப் புதைத்துவிடு ...
மனிதன் வாழ்ந்தச் சுவடுகளே இல்லாமல் ..??!