உன்னோடு ஒரு நடைப்பயணம்
அடிக்கடி திரும்பிப் பார்ப்பேன்
மணற்பரப்பில் அருகருகே வரும்
நம் பாதச்சுவடுகளை.
குளத்துத் தண்ணீரில்
பௌர்ணமி நிலவொளி பட்டுத்தெரித்தது
என்னவனின் சட்டைப் பொத்தானில்.
உன் நண்பர்களைப்பற்றிய உரையாடல்
மணலோவியம் தீடியவாறே நீ கூற..
உன் குரலோசை ஒலிப்பதிவு செய்யப்படுகிறது
என் மனத்திரையில்.
திடீரென சாரல் மழை
ஒற்றைக் குடையில்
இருவரும் - குளிர்ந்தது
குடைக்கம்பி மட்டுமல்ல
நானும்தான்.
வேண்டுமென்றே தடுக்கி
விழுவேன் - உன் தீண்டல்களுக்காக
தெருவோர தேநீர்க்கடை
திருடத்தான் தோன்றும்
நீ முத்தமிட்டு முத்தமிட்டு
குடிக்கும் அந்த தேநீர்க்கோப்பையை.
நான் கூறும் பேய்க்கதைகளை
ரசிக்கும் நீ - அந்த பாழடைந்த
வீட்டைக் கடக்கும்போதெல்லாம்.
ஏக்கத்தோடு வாங்கிக் கொண்டேன்
மல்லிகைப்பூவின் வாசனையை மட்டும்
ஏமாந்துதான் போனாள் - கோவில் வாசல்
பூக்காரி கூட..
உன் ஒற்றை நொடி மௌனம்!
பின் உதடுகளின் சலசலப்பு...
புரியாத புதிரே! - அம்மன் கோவிலில்
உன் வேண்டுதல்கள்.
உன் தொலைபேசி உரையாடல்களை
ஒட்டுக் கேட்கும் நான் - புதிய பெண்
தோழிகள் உண்டோ என்ற
புலன் விசாரணைக்காக.
நீ கண்ணனல்ல - ஆனாலும்
நான் மீராவே! உன் காதலுக்காக
காத்திருப்பதால்.
எத்தனையோ முறை எத்தனித்தேன்
உன்னிடம் என் கதை சொல்ல
ஈனச்சுரத்தில்...
தொண்டைக் குழியில் புதைக்கப்பட்ட
என் காதல் ...
விழி நீர்க் கவிதையை
வாங்கிக்கொண்ட என் கைக்குட்டை...
நட்போடு கலந்த உன் பார்வைகளால்
ஒவ்வொரு பௌர்ணமியும்
காதலைச் சொல்ல காத்திருக்கும்
நான் இன்னும்
சகராவைத் தாண்டாத ஒட்டகமே