காதல் என்பது...
ஒரு காதல் வந்த பிறகுதான்
நான் அறிந்தது....
நான் அழகாய் இருப்பதை;
அன்பாய் இருப்பதை;
பூக்களோடு...புழுக்களையும்
நேசிக்க வேண்டும் என்பதை;
கருணையாய் இருப்பதை;
எனது இருப்பின் நிச்சயத்தை;
உயிர்க்கும் கனவுகளை;
நான் மீட்பனாய் மாறிக்கொண்டு
இருப்பதை;
நான் மெருகேறிக் கொண்டிருப்பதை;
கூண்டும் வானமானதை;
நான் கடவுளோடு பேசிக் கொண்டிருப்பதை;
மற்றும்...
நான் அலட்சியப் படுத்தப் படுவதை;
என்னை இழந்து கொண்டிருப்பதை;
என் முகம் தொலைவதை;
எனது இருப்பின் நிச்சயமின்மையை;
நான் வெறுக்கப்படுவதை;
நான் வெற்றிடமாய் இருப்பதை;
நான் சீண்டப்படுவதை;
நான் அருந்தும் விஷத்தை;
எனது கண்ணீர்த் துளிகளை;
நான் அடிமையாய் இருப்பதை;
நான் துரோகம் செய்யப் படுவதை;
நான் வன்மங்களின் விலங்காகிக்
கொண்டிருப்பதை;
காதல் என்பது....
கடவுள்...
மனிதன்...
மிருகம்...
என மூன்று பூக்களில்
தேனருந்தி...
ஒரே வயிற்றுக்குள்
நிரப்பிக் கொள்ளும்
வண்டாய் இருக்கிறது.
உண்மையில் ...
இங்கே காதல் என்பது
ஒருபோதும்
யாரிடமும்
காதலாய் இருப்பதில்லை.