கண்ணீரால் எழுதும் நட்பு...

நான் நடத்திய 'அகரம்' இதழுக்காக ஈரோடு தமிழன்பன் என் மீதான பற்றுக் காரணமாக எழுதி அனுப்பிய கவிதை இப்போது நமது தளத்தின் சில தோழர்களுக்காக மீண்டும் அளிக்கிறேன்...
------------------------------------------
"கண்ணீரைக் கொடுத்து வைப்போம் .."

நகங்களால்
கீறிக்கொள்ளாத நாழிகைகளில்
படம் பார்க்க போகலாம்
ஒன்றாக,
பல்லவனில் திரும்புவோம்
ஒன்றாக
நிலாச்சாறு நிரம்பும் நம் நெஞ்சங்களில் ...

நேரத்தின் கைகளில்
பூப்பூக்கும் போதுகளில்
பத்திரிகை பரிமாற்றம்
சில்லரைக்கைமாற்று.....

முடிவெட்டிக்கொள்ளப்
போவோம் ஒரே நாளில் ஒரே கடைக்கு
'ஏனவர் வரவில்லை'
முடிவெட்டும் தோழரின் இந்தக் கேள்வி
முளைக்கவேண்டாம் .....

பகல் உணவு வேளை
பாத்திரங்கள் மாற்றிக்கொள்வோம்
எச்சில் கைகளால்
இதயங்களைச் சுத்தமாக்கி வைப்போம்...
பக்கத்து
தட்டி விலாசில் மசால்வடை தேநீர்
ஆளுக்கு ஒரே நாள் ஏற்பாடு...

நம் நெருக்கத்தை
நெய்து வைத்திருக்கும்
துணி எடுப்பது ஒரே கடையில்
தனித்தனியாய் நம்மைக்
கத்தரித்துவிடாத தையல்காரரிடம்
நம்
சட்டை,கால்சட்டைகள்
அளவு மாறாமல் பார்த்துக்கொள்வோம்....

பிறந்தநாள் பரிசுகள்
புத்தாண்டு,பொங்கள் வாழ்த்துகள்
உற்சாக கைகுலுக்கல்கள்;
நம்
நேரத்தின் சாரத்தில்
வானம்
ஊறப்போட்டு வைக்கட்டும்
புதிய உதயங்களை.....

சேமிப்புச் சீட்டுப்பணம்
அவசரத்தேவை யாருக்கோ அவருக்கு
வைப்பு நிதிக்கடன்
ஒருவர் எடுத்தால் அடுத்தவர் தாயின்
மருத்துவத்துக்கு
இன்னொருவர் எடுத்தால்
மற்றவர் மகளின் படிப்புக்கு......

கனியாத
பகைக்கு என்றே மனதில்
காய்த்துள்ள பெயரல்ல - நட்பு ..

நான்
மூச்சு வளையத்தைக்
கடக்கும் நாளில்
அழவேண்டாம் நீ ;
நீ
கண் மூடும் நாளில்
கலங்க வேண்டாம் நான் !

அழவும் கலங்கவும் வாழும்
நம் நட்பு!
ஆனாலும் அதனிடத்தில்
கண்ணீரை நாம் கொடுத்துவைப்பது
எப்போது....?
-------------------------------------------

-ஆனாலும் முறிந்துப்போனது என் நட்பு...!
அதற்காக நான் வெளியிட்ட நூல்தான்
"இரண்டாம் திங்களின் இருபது நாட்கள் ".
ஆனாலும் ஈரோடு தமிழன்பன் அதனை வெளியிட்டு வாழ்த்தும்போது கூறியதை இத்தளத்தில் பிரியாமல் இருக்கும்
நண்பர்களுக்காக பதிவுசெய்கிறேன்-
"...ஆனாலும் இனி வேண்டாம்.. பிரிவைப்பற்றிய
முடிவான முடிவு...ஏனெனில் பிரிவு சேர்க்கையின் நீட்சி....
பிரிவது சுலபம்-சேர்வது கடினம்-சேர்ந்தே இருப்பது இன்பம்....
விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து
வாழ்வது பேரின்பம்..."
-புதுவை காயத்திரி A1B+

..

.

எழுதியவர் : puthuvai gayaththiri A1B+ (11-Jul-12, 10:21 am)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 253

மேலே