கிராமத்து வீடும், வேப்பமரமும்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்
பத்திரத்தில்
கை ரேகை உருட்டிய
அந்த நொடியிலேயே
கண்ணீரோடு
கரைந்து போனது
என் கிராமத்து நினைவுகள்.....!
காதலனும் காதலியும் போல்
வீடும் பள்ளியும் அருகருகே
இடையில் இடஞ்சலாய் தார்ரோடு......!
தடுக்கி விழுந்தால்
பள்ளியென்ற பெருமை
அன்று எனக்கு மட்டுமே சொந்தம்..
இல்லாத பைக்கில்
கற்பனையில் ஏறியமர்ந்து
கால்களால் ஸ்டார்ட் செய்து
டர்..டர் என்று வாயால் சத்தமிட்டு
வட்டமடித்து மகிழ்ந்த பள்ளிமைதானம்......!
நொங்கு வண்டி கட்டி
நண்பர்களோடு
ஓட்டி திரிந்த இளமை காலங்கள்...
இன்றைய
அங்க அடையாளத்திற்காக
குரங்குப்படலில்
சைக்கில் ஓட்டிப்பெற்ற விழுப்புண்கள் ....!
கனவுகளாய்
வண்ணப்பறவைகளாய்
சிறகடிக்கும்
கிராமத்து இளமை நினைவுகள் ...!
வயதும்
அனுபவமும் போல்
எத்தனையோ மாற்றங்கள்
நான் வாழ்ந்த கிராமத்தில்.......!
தென்றல் தவழ்ந்த
என் கிராமம்
நகரமாய் மாறிக்கொண்டுள்ளது...!
நால்ரோட்டில்
பள்ளிக்கு எதிரில்
இருந்தது என் பழைய வீடு ..
நெல் வீடு, சமையல் வீடு
சாமி வீடு தின்னை ஆசாரமென
வீட்டுக்குள் சில ரூம்கள் ..
நான் சுற்றித்திரிந்து
படுத்துறங்கிய வீடும்
குண்டு விளையாடிய
வாசலும், மாட்டுக்கட்டுதரியும்
இன்று புதிய புதிய கடைகளாய்
புத்தாடை கட்டிக்கொண்டுள்ளது ...!
கடைக்காரர் உதடுகளில்
இந்தியும் ஆங்கிலமும்
தட்டுத்தடுமாறி
வியாபாரம் நடத்துகின்றன ...!
சிப்காட் தொழில்பேட்டை
வரவால் யார் யாரோ
புதிய குரல்கள் புதிய முகங்கள்...!
குட்டி மாநிலமாய்
சிறிய கிராமத்துக்குள்
குடும்பம் குடும்பமாய்
புதிய குடியிறுப்புகள்.....!
அன்று
என்னை தீண்டிய
கிராமத்து தென்றலை
தேடிப்பார்க்கிறேன்....
அது தீட்டுப்பட்டு போயிற்று
தொழில் பேட்டை புகைகளால் ...!
சாய தொழில்சாலைகளால்
கற்பிழந்து
தண்ணீரும் தன் பங்குக்கு
கலர் கலராய் காட்சியளிக்கிறது...!
வீட்டு முன்னிருந்த
மரங்களில்
மந்தாரையும் அசோகமரமும்
ஆயுளை முடித்துக்கொள்ள
தனி மரமாய் தனித்து இருந்தது
நான் சிறுவயதில்
கட்டிபிடித்து மூக்குசிந்தி
சுற்றி சுற்றி
விளையாடிய வேப்பமரம்....!
எல்லாம்
புதியதாய் இருக்க
பழைய சிநேகிதத்தோடு
தடவிக்கொடுத்தேன் மரத்தை....!
அந்த நொடிப்பொழுதில்
சின்ன வயது சொர்கங்கள்
மீண்டும்
தென்றலாய் தாலாட்டி மகிழ்ந்தது ...!
கையை எடுக்கையில்
ஏதோ ஈர்த்தது கரங்களை
வேப்பமர பசை
பாசமாய் அன்பாய்......!
உன் அன்புக்கு தலை வணங்கி
உன்னை சுமக்கும்
மண்ணுக்கு முத்தமிட்டேன்
சிலிர்த்துப்போனேன் தாய்மண் பாசத்தால்......!