ஏக்கம் .
பத்துமாதம் சுமந்ததாலோ
என்னவோ அன்னையவள் மீது
அதிகமாய் உள்ளது பாசம்
சுமக்கவில்லை என்பதற்காக
பாசம் குறையவில்லை
என் தந்தையின் மேல்...
நான்காவதாய் பிறந்த
பெண் குழந்தை
ஆதலால் அற்புதமான
தருணங்களை நான்
இழந்துவிட்டேன்,
இன்றுவரை....
தந்தையின் விரல் பிடித்து
நடந்ததில்லை,சாலைகளில்....
நானறிந்த வரை
சுமுகமான பேச்சிற்கு
அறவே இடமில்லை...
பேசிய வார்த்தைகளை
எண்ணிக்கையில் கூறிவிடலாம்
தோழியர்களின் தந்தைகள்
நண்பர்களைப் போல
ஏங்குகிறேன் அந்த
அன்பைப் பெற
என் தந்தையிடத்தில்...
என் ஏக்கத்தை
சொல்லக் கூடிய
வார்த்தைகளை
தேடிப் பார்க்கிறேன் ...
அது உணர்வுகளாகவே
என் கண்முன் உலவுகிறது....
ஆதியானவனே! என்
அன்புக்குரிய தந்தையின்
தோழமை உணர்வை
இனிவரும் நாட்களேனும்
பெற அருள்புரிவாயா?
ஏங்குகிறேன்...