நட்பு.
"உன் பேச்சு காய்"-என்பதில்தான்
துவங்கியது உனக்கும் எனக்குமான
அறிமுகம்.
அவ்வப்போது...
"வெவ்வெவ்வே"....காட்டி
வாய் கோணிப் பழித்தது.
கொஞ்சம் கனிந்து...
"காக்காய் கடி" ஆயிற்று.
கோலி, இறகு, தீப்பெட்டி அட்டைகள்
பகிர்ந்து கொண்டு...
பட்டப் பெயர்களால்
அழைத்துக் கொண்டோம்.
ஒவ்வொரு சின்ன சந்தோஷங்களிலும்
கை தட்டிக் கொண்டு...
தோளின் மேல் கை போட்டு...
தெருக்களில் வலம் வந்தோம்.
சினிமா பார்த்தோம்.,
சினிமா பேசினோம்...
உலகத்தைக் காலின் கீழ் வைத்து
அதன் தலையில் நடந்து சென்றோம்.
நாம் பார்த்துக் கொள்ளாத நாட்களை
கடவுளின் தினத்திலிருந்து
கிழித்தே எறிந்தோம்.
எப்போதும் இணைந்தே இருக்கும்
கைகளிலிருந்து
இதயரேகைகளை
இடம் மாற்றிக் கொண்டோம்.
இன்று-
ஊன்றுகோலின் மூன்றாம் காலோடு
நடக்கிறேன் நான்.
என்றாலும்-
இப்போது எனக்கு...
நான்கு கண்கள்..
நான்கு கைகள்...
இரண்டு மூளைகள்
என்றாலும்...
ஒற்றை இதயம்..
ஒரே துடிப்புடன்.

