வரதட்சிணை

தட்சணை அது
தருமக் கொடை அல்லவா...
வரதட்சணை
வலிந்து, இழிந்து
கேட்கும் பிச்சை அல்லவா...
வார்த்தையிலேயே முரண்

கேளடா இளைஞனே...!

வரனுக்கு
அர்ச்சனை போதாதா..?
தட்சணை எதற்கு..?

அதிகாரப் பிச்சை
ஆணவப் பிச்சை
கணக்கு போட்டு
காசு பறிக்கும்
கெளரவப் பிச்சை

பெண்டிரை ஈன்றவர்
ஆண்டியாவது என்ன
எழுதப் படாத சட்டமா?
கண்டீரோ ஆணினமே நீவீ ர்
சந்தை மாடுகளை விடவும் மட்டமா?

வாழ்க்கைக்கு துணையென்றால்
வரதட்சணை மறந்து விடு
வசதிக்கு துணையென்றால்
மானம்,மரியாதையை மறந்து விடு
வாழ்க்கைக்கும் வசதிக்கும் என்பவனே
நீ ஆண்மகன் என்பதையே மறந்து விடு

மனைவி என்பவள்
உனக்கு இன்பம் துய்ப்பவள்
துண்பம் துடைப்பவள்
உனக்கு பிடித்ததை
தனக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்பவள்
தனக்கு பிடிக்காதவைகளையும்
உனக்காக பிடித்ததாய் மாற்றிக் கொள்பவள்

காசு கொடுத்து வாங்குபவர்க்கே
பொருள் சொந்தமென்றால்....
நீ யாருக்குச் சொந்தம்?
சிந்திக்கத் தெரிந்தவனே
சீர் தூக்கிப் பார்!

அடிமையான பின்பு-உன்
அதிகாரம் செல்லாது
நீ வாங்கிய வரதட்சணை வடு
அவள் மனதில் அழியாது!

உன் மோக முத்தை
முந்நூறு நாட்கள் சுமந்து
மரண விளிம்பு வரை சென்று
மடியில் முழுநிலவாய்-உன்
சந்ததி ஈன்றெடுத்து
உன்னை ஆண்மகன் என்று
உலகுக்கு அறிவிக்கிறாளே
அவளுக்கு நீ என்ன தரப் போகிறாய்?


கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவள்
காலடிக்கு கீழ் அத்துனையும்....

இப்படியிருக்க அவளை
கைபிடிக்க கைக்கூலி
கேட்பது முறையா?

மணவாழ்வில் இன்பம் நிலைக்க
மனைவியும் மற்றவர்களும் மதிக்க
உன் சுயமரியாதை சிறக்க
வரதட்சணைக்கெதிராய்
வாளேந்தி போரிட வேண்டாம்-முடிந்தால்
வார்த்தையில் போரிடு
வாழ்க்கையில் பேணிடு

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (2-Aug-12, 8:21 am)
பார்வை : 337

மேலே